சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்த வழக்கை டிசம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (26) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வழக்கை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வழக்கு அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையின் ரக்பி விளையாட்டு அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனம் வழங்கிய ரூ. 70 மில்லியனை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, சட்டமா அதிபர் மேற்படி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு, இதற்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்திருந்தது.
குறித்த வழக்கில் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment