இராணுவத்தினர் நெருக்கடிக்குள்ளாகுவர், சட்டமூலங்களை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும் : இராணுவத்தினர் தனிப்பட்ட தேவைக்காக யுத்த களத்துக்கு செல்லவில்லை, நாட்டுக்காகவே யுத்தம் செய்தார்கள் - திலித் ஜயவீர தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

இராணுவத்தினர் நெருக்கடிக்குள்ளாகுவர், சட்டமூலங்களை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும் : இராணுவத்தினர் தனிப்பட்ட தேவைக்காக யுத்த களத்துக்கு செல்லவில்லை, நாட்டுக்காகவே யுத்தம் செய்தார்கள் - திலித் ஜயவீர தெரிவிப்பு

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கத்துக்கான சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. இவ்விரு சட்டமூலங்கள் ஊடாக வெளியக பொறிமுறையின் உள்ளடக்கங்கள் உள்ளக பொறிமுறையின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளப்படும். அத்துடன் இவ்விரு சட்டமூலங்களால் எதிர்காலத்தில் அமைதி இல்லாதொழிவதுடன், இராணுவத்தினர் நெருக்கடிக்குள்ளாகுவர். இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் கைவிட வேண்டும் என்று சர்வஜன சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வெளியக பொறிமுறைக்கு இலங்கை எதிர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இனம், மத, பேதமற்ற வகையில் இலங்கையர் என்ற அடிப்படையில் கௌரவத்துடன் இதை அனைவரும் கொண்டாட வேண்டும்.

மனித உரிமைகள் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் இலங்கையின் நிலைப்பாடு குறித்து நாட்டு மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் கூட்டத் தொடர் இடம்பெறும்போது ஒரே பிரச்சினைதான் தொடர்ச்சியாக பேசப்படும்.

இலங்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. ஆகவே அதனை வெளியக பொறிமுறை ஊடாக ஆராய வேண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றே தொடர்ச்சியாக குறிப்பிடப்படுகிறது.

இன்று நாம் அனைவரும் சுதந்திரமாக வாழ்கிறோம். இராணுவத்தினரால்தான் இந்த சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் தனிப்பட்ட தேவைக்காக யுத்த களத்துக்கு செல்லவில்லை. நாட்டுக்காகவே யுத்தம் செய்தார்கள். வெளிவிவகாரத்துறை அமைச்சரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு பல சந்தேகம் எழுந்துள்ளது.

சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கத்துக்கான சட்டமூலங்கள் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது. இவ்விரு சட்டமூலங்கள் ஊடாக வெளியக பொறிமுறையின் உள்ளடக்கங்கள் உள்ளக பொறிமுறையின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளப்படும். அத்துடன் இவ்விரு சட்டமூலங்களால் எதிர்காலத்தில் அமைதி இல்லாதொழிவதுடன், இராணுவத்தினர் நெருக்கடிக்குள்ளாகுவர்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்த இராணுவத்தினர் ஏன் காலம் முழுவதும் அச்சத்துடன் வாழ வேண்டும். ஏன் இதை முடிவுக்கு கொண்டுவர கூடாதா? இலங்கையின் உள்ளக விடயத்தில் பிரச்சினைகள் காணப்படலாம் அதனை பேச்சுவார்த்தை ஊடாக தீர்த்துக் கொள்ளலாம். வெளியக தலையீடு அவசியமற்றது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்

No comments:

Post a Comment