(லியோ நிரோஷ தர்ஷன்)
தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது. எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது என தெரிவித்த ஓய்வு பெற்ற இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் அனில் குமார் சவ்லா, அனைத்து கடற்படைகளின் கூட்டு முயற்சி மற்றும் கடல்சார் இராஜதந்திரத்தின் தனித்துவமான அனுகூலங்களில் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற 'கடல்சார் உரையாடல்' மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அட்மிரல் அனில் குமார் சவ்லா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், இலங்கைக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நாகரிக பிணைப்புகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. மேலும், இந்தியக் கடற்படையும் இலங்கை கடற்படையும் கிட்டத்தட்ட பிணைக்கப்பட்டவையாகும்.
கடல்சார் இராஜதந்திரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்கள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாகும். கடல்சார் பாதுகாப்பும், பொருளாதார பலன்களுக்காக கடலை பயன்படுத்துவதும் பிரிக்க முடியாதவை. எனவே பாதுகாப்பும், வளர்ச்சியும் கைகோர்த்து செல்ல வேண்டும். கடல்சார் வளங்கள் வரம்பற்றதல்ல என்பதையும், அவற்றின் நிலையான பயன்பாட்டை உறுதிசெய்வது அவசியம்.
மரபுசாராத கடல்சார் பாதுகாப்புச் சவால்கள் 21ம் நூற்றாண்டில் அதிகரித்திருப்பதற்கான நான்கு முக்கியக் காரணங்கள் உள்ளன. சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான குழுக்களும் கடல் பயணத்திற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
1990 ஆம் ஆண்டுக்கு பிறகு கடல்சார் நடவடிக்கைகள் அதிகரித்ததால், தாக்குதல் இலக்குகளும், ஆயுதங்களை விநியோகிக்கும் வழிமுறைகளும் பெருகின. பலவீனமான அரசுகள், அவற்றின் எல்லைக்குள் செயல்படும் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த தவறுவது ஒரு முக்கிய காரணம். உதாரணமாக, செங்கடலில் ஹூத்தி குழுவினர் நடத்திய தாக்குதல்களை குறிப்பிடலாம்.
கடற்கொள்ளை மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகியவை இனிமேல் சாதாரண குற்றங்கள் அல்ல. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக மாறிவிட்டன. இந்த குற்றங்களை எதிர்த்து போராட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
மறுபுறம் தீவிரவாதம் உலகமயமாக்கப்பட்ட வர்த்தகமாக மாறியுள்ளது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இந்த யதார்த்தத்தின் கொடூரமான நினைவூட்டலாக உள்ளது.
எனவே கடல்சார் பாதுகாப்பை எந்த ஒரு நாடும் தனியாக அடைய முடியாது. உலகில் மிகப்பெரிய கடற்படை இருந்தாலும் அது சாத்தியமில்லை. அனைத்து கடற்படைகளின் கூட்டு முயற்சி இங்கு அவசியமாகிறது. கடற்படைகள், கடல்சார் இராஜதந்திரத்தில் தனித்துவமான அனுகூலத்தை கொண்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment