கட்டார் மீது விமானப் படைத் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 9, 2025

கட்டார் மீது விமானப் படைத் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

இஸ்ரேல் விமானப்படை கட்டாரில் இன்று (09) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் இன்று (09) கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸ் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து வான் வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2023.10.07 இல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடியாக காரணமான ஹமாஸ் தலைவர்களை அழிப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசா போர் மற்றும் பிணைக் கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் குழுவுக்கு கத்தார் அரசு ஆதரவு அளித்து வருகிறது. ஹமாஸ் அரசியல் பிரிவின் அலுவலகம் தோஹாவில் செயல்பட்டு வருவதும் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தற்போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இது பொறுப்பற்ற இஸ்ரேலிய செயல் மற்றும் பிராந்திய பாதுகாப்பை சீர்குலைக்கும் ஒரு செயல்" என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது

அத்துடன் சமூக ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment