வட பகுதி கடற்பரப்பில் தலைவிரித்தாடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சட்டவிரோத செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதி பகுதிக்குள் முற்றாக கட்டுப்படுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் பதில் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 09.09.2015 இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம்தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் 09.09.2025 இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது கடந்த கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தேன்.
குறிப்பாக இந்திய மீனவர்கள் வட மாகாண கடற் பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து சுமார் 18 வகையான சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி இலங்கைக்குரிய கடல் வளத்தினை அழிப்பதுடன், எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினை சூறையாடிச் செல்கின்றனர்.
அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விடயங்கள் தொடர்பில் கடந்த கடற்றொழில் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் என்னால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் என்னால் கடந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த விடயங்களின் முன்னேற்றநிலை தொடர்பிலேயே இதன்போது கேள்வி எழுப்பியிருந்தேன்.
அந்த வகையில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதைக் கட்டுப்படுத்துவதிலும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் தாம் கூடுதல் கரிசனையுடன் செயற்படுவதாக இதன்போது கடற்றொழில் அமைச்சர், கடற்றொழில் பிரதி அமைச்சர் ஆகியோரால் இதன்போது பதில் வழங்கப்பட்டது.
மேலும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டதுடன், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடற்படையினருடனும், பொலிசாருடனும் தாம் இது தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகராலும், கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவினாலும் இதன்போது பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களின் இக்கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்தேன். அத்தோடு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் என்னும்போது வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடி வைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களினால்தான் பாரம்பரிய கரவலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற விடயங்களையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.
எனவேதான் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.
அந்த வகையிலேயே எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படுமென்ற நற்செய்தியை கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்றார்.
.jpg)
No comments:
Post a Comment