9 சபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து கைப்பற்றுவோம் : அநுர ஆட்சி செய்ய நாடு எஞ்சியிருக்கிறது என்றால் காரணம் ரணில் - தயாசிறி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 21, 2025

9 சபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து கைப்பற்றுவோம் : அநுர ஆட்சி செய்ய நாடு எஞ்சியிருக்கிறது என்றால் காரணம் ரணில் - தயாசிறி தெரிவிப்பு

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். 9 மாகாண சபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து நாம் கைப்பற்றுவோம். அதற்கான வேலைத்திட்டங்களை இப்போதிருந்தே ஆரம்பிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பிரிந்தால் தோல்வி என்பது கடந்த தேர்தல்களில் எமக்கு நன்றாக புரிய வைக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலேயே பிளவுகள் ஆரம்பித்தன. 77 ஆண்டுகளின் பின்னர் பிளவுகளை ரணில் விக்கிரமசிங்கவால் சரி செய்ய முடிந்துள்ளது. கட்சிகள் பிளவடைந்தாலும் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது.

பல தசாப்தங்கள் நாடு அபிவிருத்தியடைவதை தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இளைஞர்களை மூளை சலவை செய்துள்ளனர். இவர்கள் பாராளுமன்றத்தை தமது தேவைக்கேற்ப மாற்றுவோம் எனக் கூறுகின்றனர். அவ்வாறு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

எனவே இந்த ஒன்றிணைவை ஆசீர்வாதமாகவே நாம் பார்க்கின்றோம். அழைப்பு விடுக்கப்படாமலேயே ரணில் விக்கிரமசிங்கவுக்காக அனைவரும் ஒன்றிணைந்தனர். இதனால் அரசாங்கத்துக்கு மண்டியிட நேர்ந்தது. அவ்வாறில்லை எனில் எதிர்த்தரப்பினர் அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்திருப்பர்.

எதிர்க்கட்சி அரசியல்வாதியாக இருக்கும் ஒரேயொரு காரணத்துக்காக அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வரலாற்றில் முதன்முறையாக அரசியல் மேடையேறியவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரால் அனைவரும் இலக்கு வைக்கப்படுகின்றனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னரே யார் கைது செய்யப்படப் போகின்றனர் என அமைச்சர்கள் கூறுகின்றனர். பங்களாதேஷாகவோ, நேபாளமாகவோ இலங்கை மாறுவதை ரணில் விக்கிரமசிங்கவே தடுத்தார். அதற்காக அவர் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தினார். ஆனால் அவர் அதன் ஊடாக மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எம்மிடம் பதில் இல்லை. இன்று அநுர ஆட்சி செய்வதற்கு நாடு எஞ்சியிருக்கிறது என்றால் அது ரணில் விக்கிரமசிங்கவால்தான்.

ரணில் வழங்கிய கையிருப்பு ஓராண்டு கடந்தும் அவ்வாறே இருக்கிறது. இவ்வாறு தொடர்ந்தும் பயணிக்க முடியாது. இந்த அரசாங்கம் நீண்ட காலம் பயணிக்காது. நாம் அனைவரும் இணைந்து இவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். 9 மாகாண சபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து நாம் கைப்பற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment