திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முத்து நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள விவசாய காணியை அரசாங்கம் இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மேற்படி கோரிக்கையை முன்வைத்து திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாகவும் நேற்றையதினம் எட்டாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டமொன்றும் பதிக்கப்பட்ட மக்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு ஆர்ப்பாட்டம்
இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள முத்து நகர் 800 ஏக்கர் விவசாய காணியை மீள விவசாயிகளுக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நேற்று பிரதமர் காரியாலயத்துக்கு முன்பாக முத்து நகர் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முத்து நகர் பகுதியில் உள்ள 800 ஏக்கர் விளை நிலத்தையும், தமது வாழ்வாதாரத்தையும் இழந்து விவசாயிகள் வாழ வழியின்றி கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசாங்கத்திற்கு எமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ள போதும், அரசாங்கம் தொடர்ந்தும் விவசாயிகளின் விடயத்தில் அலட்சியமாக செயற்படுவதாக போராட்டக்கார்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
திருகோணமலை முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்கள் அரசாங்கத்தால் இந்திய நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி நேற்று (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணியளவில் ஒன்றுகூடிய ஆர்பாட்டக்காரர்கள் தமது வாழ்வாதாரமாக உள்ள விளை நிலங்களை இழந்து பெரும் நெலுக்கடிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.
முத்து நகரிலிருந்து 2 பேருந்துகளில் வருகை தந்திருந்த விவசாயிகள், பொதுமக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
விவசாயிகளிடமிருந்த காணிகளை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது. மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்காக இருந்த குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.
முத்து நகர் விவசாய காணி எமக்கானது அவற்றை திருப்பிக் கொடு, அரசாங்கத்தின் செயற்பாட்டால் வெளிநாட்டு கம்பெனிகள் இலாபமடைந்துள்ளன எனினும் விவசாயிகள் தெருவில் விடப்பட்டுள்ளனர், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, எமது உரிமை எமக்கே வேண்டும், குளங்களை மூடும் நடவடிக்கையை கைவிடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயிகளை இவ்வாறா நடத்துவீர் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டபதாகைகளை ஏந்தியும் கோசமிட்டும் ஆர்ப்பாட்டக்கார்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேற்படி போராட்டம் தொடர்பில் முத்து நகர் விவசாயிகள் சங்கத் தலைவர் தாரிக் அசிஸ் தெரிவிக்கையில், முத்து நகரில் சுமார் 53 வருட காலமாக விவசாயம் செய்துவந்த காணிகளை தற்போதைய அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக இந்திய தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. உரிமை கோரிய விவசாயிகளையும் விரட்டி அடித்து விட்டனர். எமக்கு உரிய தீர்வை வழங்குமாறு தெரிவித்து ஏற்கனவே ஒகஸ்ட் 14 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தோம்.
அன்று ஜனாதிபதி செயலாளர் எமக்கு அழைப்பு விடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார். எனினும் அவர் குறிப்பிட்டதை போல எமக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்திய நிறுவனம் விளைநிலங்களைச் சூழ வேலியமைத்து அவற்றை ஆக்கிரமித்துள்ளது. குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் எமக்கான தீர்வை வழங்க வேண்டும்.
அதுவரை பிரதமர் அலுவலகத்தை விட்டு அகலும் எண்ணம் எமக்கில்லை. சுமார் 800 ஏக்கர் நிலத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணி எனக் கூறி கையகப்படுத்தியுள்ளனர். 1984 ஆம் ஆண்டு குறித்த காணி தொடர்பில் அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பல வருடங்களாக விவசாயம் செய்துவரும் மக்களுக்கு இவ்விடம் தெரியாது. 2023 ஆம் ஆண்டுக்கு பிறகே காணி பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்தது. உரிய ஆவணங்கள் இல்லை ஆகையால் நிலத்தை உரிமை கோர முடியாதென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றார்.
திருகோணமலையில் சத்தியாகிரகம்
இதனிடையே, திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்தும் 08 வது நாளாகவும் நேற்றும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!’, ‘இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!’, ‘பொய்கள் வேண்டாம்’, ‘விவசாயிகளை இப்படியா நடாத்துவது’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Vidivelli
No comments:
Post a Comment