'தம்பபவனி' காற்றாலைத் திட்டமே போதும், இனி மன்னார் தீவிற்கு காற்றாலைத் திட்டம் தேவையில்லை - சபையில் இடித்துரைத்த ரவிகரன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 21, 2025

'தம்பபவனி' காற்றாலைத் திட்டமே போதும், இனி மன்னார் தீவிற்கு காற்றாலைத் திட்டம் தேவையில்லை - சபையில் இடித்துரைத்த ரவிகரன் எம்.பி

மன்னார் தீவின் தெற்குக்கரையில் 30 நவீன விசையாழிகளை உள்ளடக்கி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 'தம்பபவனி' எனும் காற்றாலைத்திட்டமே போதும் எனக்குறிப்பிட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இனி மன்னார் தீவினுள் காற்றாலைத் திட்டம் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சிறிய அளவிலான நிலப்பரப்பினைக் கொண்ட மன்னார் தீவில் மீண்டும் காற்றாலைத் திட்டங்களை ஏற்படுத்தினால் அங்கு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படுமென்பது அங்குள்ள மக்களின் அபிப்பிராயமெனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மன்னார் தீவு மக்களின் அபிப்பிராயங்களைக் கருத்திலெடுத்துச் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் 21.08.2025 உரையாற்றுகையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் மக்கள் இன்றோடு 19 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் தீவில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கக்கூடாதென வலியுறுத்தியே அவர்களால் இவ்வாறு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக இம்மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். அதற்கமைய இந்தக் காற்றாலைத் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைப்பதெனவும், இத்திட்டம் தொடர்பில் உரிய தரப்பினர் மக்களிடம் அபிப்பிராயங்களைப் பெற வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே மன்னார் தீவின் தெற்கு கரையில் கடந்த 2020ஆம் ஆண்டு “தம்பபவனி” எனும் பெயரில் 30 நவீன விசையாழிகளை உள்ளடக்கி இலங்கையின் முதலாவது பெரிய அளவிலான காற்றாலை மின்சக்திப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை விட மன்னார் தீவிற்கு வெளியேயும் வங்காலை மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய பகுதிகளிலும் 06 காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டின் மின்சாரத் தேவைக்குமாக ஏற்கனவே தம்மால் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதென்பதே மன்னார் தீவு மக்களின் அபிப்பிராயம்.

அத்தோடு சிறிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்ட மன்னார் தீவில் மீண்டும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை நிறுவினால் மக்கள் மன்னார் தீவில் வாழ முடியாத துர்ப்பாக்கியநிலை ஏற்படுமென்பதும் அம்மக்களின் அபிப்பிராயமாகவுள்ளது.

எனவே இந்த விடயத்தில் மன்னார்தீவு மக்களின் இந்த அபிப்பிராயங்களைக் கருத்திலெடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment