(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
தபால் சேவையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் வழங்குவதற்கும், மேலதிக நேர கொடுப்பனவுக்கும் செலவாகுகிறது. ஆகவே பெறும் சம்பளத்துக்கு உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும். மேலதிக நேர கொடுப்பனவு அதிகரிக்கப்படமாட்டாது. மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை ஸ்கேனர் (பிங்கர்பிரின்) இயந்திரம் நிச்சயம் பொருத்தப்படும். அரசியல் நோக்கத்துடனான போராட்டத்துக்கு அடிபணியப் போவதில்லையென சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தின் ஊழியர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் தலைவர் உட்பட எதிர்க்கட்சியினர் பேசுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எவரும் இவ்விடயம் குறித்து கேள்வியெழுப்பவில்லை.
ஐக்கிய தபால் சேவை சங்கத்தினர்தான் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் முன்னிலையில் உள்ளார்கள். பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள், தனியார் அஞ்சல் சேவையினர் இலாபமடைவார்கள் என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.
தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1000 நியமனங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. அதேபோல் 1000 நியமனங்களுக்கு விண்ணப்பம் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாகனம் கொள்வனவுக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தபால் நிலையங்களை புனரமைக்க 600 மில்லியன் ரூபா திறைசேரியால் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில்தான் ஒரு தரப்பினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தில் சுதந்திர தொழிற்சங்கம், ஐக்கிய தபால் தொழில்சங்கம், ஐக்கிய தபால் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அரச நிர்வாக கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு கோரியும், கைரேகை ஸ்கேனர் (பிங்கர்பிரின்) இயந்திரத்தை பொருத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள்.
தபால் சேவையில் 2 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 168 ரூபா மேலதிக நேர கொடுப்பனவு 234 ரூபாவாகவும், 2 ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 254 ரூபா மேலதிக நேர கொடுப்பனவு 370 ரூபாவாகவும், 1 ஆம் தர சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 222 ரூபா மேலதிக நேர கொடுப்பனவு 324 ரூபாவாகவும், 1ஆம் தர உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 303 ரூபா மேலதிக கொடுப்பனவு 439 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
தபால் தொழிற்சங்கத்தினர் முன்வைத்த 17 கோரிக்கைகளை நிறைவேற்ற இணக்கம் தெரிவித்துள்ளோம். மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது. கைரேகை ஸ்கேனர் (பிங்கர்பிரின்) இயந்திரத்தை பொருத்துவது கட்டாயம் என்பதில் உறுதியாகவுள்ளோம்.
தபால் சேவையின் வருமானத்தில் 70 சதவீதம் சம்பளம் வழங்குவதற்கும், மேலதிக நேர கொடுப்பனவுக்கும் செலவாகுகிறது. ஆகவே பெறும் சம்பளத்துக்கு உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் முன்பாக நேற்று சேவையாளர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் எதிர்க்கட்சியின் தொழிற்சங்கவாதி. தபால் சேவையாளர்களுக்கு மேற்சட்டை, காற்சட்டை, பாதனி மற்றும் ஒருசோடி காலுறை வழங்கப்படுகிறது. ஆகவே இவர்கள் எவ்வழியில் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அடிபணியப் போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment