பட்டலந்த, பிணைமுறி குற்றச்சாட்டுக்களுக்கு ஒன்றிணையமாட்டோம் : அரசியல் பழிவாங்களுக்காகவே ரணில் கைது என்கிறார் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 24, 2025

பட்டலந்த, பிணைமுறி குற்றச்சாட்டுக்களுக்கு ஒன்றிணையமாட்டோம் : அரசியல் பழிவாங்களுக்காகவே ரணில் கைது என்கிறார் மனோ கணேசன்

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது முன்வைக்கப்பட்டுள்ள பட்டலந்த வதை முகாம் மற்றும் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையப் போவதில்லை. அரசியல் பழிவாங்களுக்காகவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை இலக்குப்படுத்தி அரச அதிகாரத்துடன் இடம்பெறும் பழிவாங்கல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம், பிணைமுறி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையப் போவதில்லை.

ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் பலர் இச்சந்தர்ப்பத்தில் இங்குள்ளார்கள். அதுவொன்றும் பிரச்சினையில்லை. 

ஜனாதிபதி பதவி மற்றும் தனிப்பட்ட பயணம் தொடர்பான விவாதம் ஆரம்பித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விரிவாக கலந்துரையாடலாம். குறுகிய அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment