(இராஜதுரை ஹஷான்)
தபால் சேவையில் கை விரல் ரேகை பதிவு இயந்திரம் (Finger Print Scanner) பொருத்தல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவில் மாற்றமில்லை என்ற அரசாங்கத்தின் உறுதியான இரண்டு கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து தபால் சேவையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (24) மாலையுடன் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டனர். நியாயமற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஒட்டு மொத்த மக்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது. கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இன்று முதல் கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் முறைமை அமுல்படுத்தப்படும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தபால் சேவை தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (24) வெகுஜன ஊடக அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டதாவது, தபால் சேவையாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் இணக்கம் தெரிவித்தனர். தபால் சேவையில் கை விரல் ரேகை பதிவு இயந்திரம் பொருத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
இவ்விரு கோரிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளுக்காக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு விளங்கிக் கொண்டு அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
தபால் சேவையில் கை விரல் ரேகை பதிவு இயந்திரம் பொருத்தப்படும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தோம். இவ்விரு விடயங்களிலும் மாற்றமில்லை என்பதை தொழிற்சங்கங்களுக்கு அறிவித்தோம்.
இதனை தவிர்த்து ஏனைய கோரிக்கைகளை பற்றி பேசுவதாக இருந்தால் மாத்திரம் கலந்துரையாடலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். இதற்கமைய தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இணக்கம் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையின்போது தபால் சேவையாளர்கள் முன்வைத்த 17 கோரிக்கைகளையும் எதிர்வரும் மாதம் முதல் செயற்படுத்த இணக்கம் தெரிவித்தோம். தபால் சேவையில் கை விரல் ரேகை பதிவு இயந்திரம் பொருத்தல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை மேலும் அதிகரிக்க முடியாது என்ற நிபந்தனையை தொழிற்சங்கத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
இதற்கமைய ஞாயிற்றுக்கிழமை (24) மாலை 4 மணி முதல் பணிப் புறக்கணிப்பை கைவிட்டு கடமையில் ஈடுபட தொழிற்சங்கத்தினர் இணக்கம் தெரிவித்தனர்.
ஆகவே பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட தபால் சேவையாளர்களுக்கு எதிராக எடுப்பதற்கு தீர்மானித்திருந்த நிறுவன மட்டத்திலான நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. எதிர்ப்பை வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது.
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இன்று முதல் கை விரல் ரேகை பதிவு இயந்திரம் முறைமை அமுல்படுத்தப்படும். அரச ஊழியர்கள் தமது கடமைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்றார்.
No comments:
Post a Comment