(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
“மலையக தமிழ் மக்கள்” என்ற சொற்பதத்தை சட்ட ஆவணங்களில் உள்ளடக்க தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் மலையக தமிழ் மக்கள் என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மலையக மக்கள் பிரத்தியேக கலாச்சாரங்களை கொண்ட மக்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ளோம். அது எங்களின் கொள்கையாகும். ஹட்டன் பிரகடனத்தில் இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி அந்த மக்கள் மலையக தமிழ் மக்கள் என்று இன்றைய பிரேரணையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் அவ்வாறு இந்த மக்களை அழைப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அடுத்ததாக சட்ட ஆவணங்களிலும் இந்த வசனம் உள்ளடக்கப்பட வேண்டும். இதற்காக சில சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
சனத்தொகை கணக்கெடுப்பின் போதும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களிலும் இந்த வசனத்தை பயன்படுத்த தேவையான சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும். சகலரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இதனை செய்வோம். சில தரப்பினர் இணங்காமல் இருந்தாலும் அவர்களையும் இணங்கச் செய்து அதனை செய்வோம்.
மலையக மக்கள் இலங்கையர்களே. அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் உரிமைளை பாதுகாக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். அவர்களுக்கென காணிகள், வீடுகள் இருக்க வேண்டும். அத்துடன் சிறந்த கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதன்படியே ஹட்டன் பிரகடனத்தை நாங்கள் முன்வைத்தோம். இவர்களே இந்த நாட்டில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்காக வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment