(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான மற்றும் நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது. சட்டமியற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையாக ஒத்துழைப்போம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் முறைமை தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் நான்காண்டுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டங்களை வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். மாகாண சபைகளை மறக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகள் ஊடாக மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்தக்கு பொறுத்தமானதாக அமையாது.
தேர்தலை நடத்துவதாயின் அதற்குரிய சட்டம் அவசியம். ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்தும் இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது. சட்டமியற்றும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. ஆகவே எமது விருப்பத்திலான சட்டத்துக்கு அமைய தேர்தலை நடத்த முடியாது. சட்டவாக்க துறையால் இயற்றப்படும் சட்டத்துக்கு அமைவாகவே தேர்தலை நடத்த முடியும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான மற்றும் நிச்சயிக்கப்பட்ட சட்டமேதும் தற்போது கிடையாது. தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
மாகாண சபைகளின் நிர்வாகத்தின்போது மக்கள் பிரதிநிதிகள் அல்லாமல், அரச அதிகாரிகளால் தீர்மானங்கள் எடுக்கப்படுவது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. ஆகவே மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் உரிய தீர்மானத்தை பாராளுமன்றத்தின் ஊடாக எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment