இழக்கப்பட்டுள்ள தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழ வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 22, 2025

இழக்கப்பட்டுள்ள தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழ வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காணிகள் விடுவிப்பு, காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சினை உள்ளிட்ட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உறுதியாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி சிவஞானம் ஸ்ரீதரன் வெள்ளிக்கிழமை (22) சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்துவது உறுதி. அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். காணாமல் போனவர்களுக்கு நீதி, தையிட்டி விகாரை பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு, இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். அரசியல் கைதிகள் விடுதலை போன்றவை தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் அதற்காக அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்கும்போதும் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியிருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்றைய பிரச்சினையல்ல. அது காலங்காலமாக புரையோடிப்போயுள்ள பிரச்சினையாகும்.

அதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது ஒரு சிலர் கூறுவது போல இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தொடர்பில் பாகுபாடுகள் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

1981 ஆம் ஆண்டு நாட்டின் சனத்தொகை மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் 8 இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருக்குமானால் இன்று 16 அல்லது 18 இலட்சம் மக்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள்.

தற்போது அங்கு ஆறு இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதே வேதனைக்குரிய விடயம். அன்று 11 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள். அடுத்து அதுவும் குறைவடையலாம். அந்த வகையில் அரசியல் ரீதியான இருப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

அந்த மக்களின் வெளியேற்றமே இந்த கேள்விக்குறிக்கான காரணம். கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். அதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் மூலமே பல்லாயிரக்கணக்கான மக்கள் இழக்கப்பட்டுள்ளார்கள்.

இப்போதும் மாணவர்கள், புத்திஜீவிகள் அங்கிருந்து வெளியேறும் மனநிலை அதிகரித்திருக்கின்றது.

ஒரு காலத்தில் கல்வி ரீதியில் பெரும் முன்னேற்றமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் விளங்கியது. எனினும் கடந்த 10 வருடங்களைப் பார்க்கும்போது கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையே காணப்படுகிறது. இம்முறை அது ஒன்பதாவது இடத்திற்கு வந்துள்ளது.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் அதன் வடுக்கள் ஆற்றப்படவில்லை. அதன் காரணமாகவே இவ்வாறான ஒரு பிரேரணையை ஸ்ரீதரன் எம்பி சபையில் முன்வைத்துள்ளார்.

இவ்வாறு மக்கள் வெளியேறுவார்களானால் இன்னும் சில காலங்களில் மக்கள் இல்லாத யாழ்ப்பாணமே இருக்கும். இந்த நிலைமையில் இருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையே நாம் சிந்திக்கின்றோம். அதற்காகவே அரசாங்கம் வடக்கிற்கான துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

அந்த வகையில் பல திட்டங்கள் தற்போது வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மூன்று தொழில் பேட்டைகளை அங்கு உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் பகுதிகளில் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விமான நிலையம், துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கை தரும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்களையே எமது அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இழக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கில் மக்கள் வாழ வேண்டும். அதன் பின்னரே சுய நிர்ணய உரிமைக்காக போராடுவதா அல்லது தனி நாட்டுக்காக போராடுவதா என்பதை தீர்மானிக்க முடியும். அவர்கள் இலங்கையில் வாழுகின்ற மனநிலையை உருவாக்குவது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment