(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் அதிகளவில் வாக்களித்து தேசிய மக்கள் சக்தியையே தெரிவு செய்துள்ளனர். அந்த மக்களின் ஆணையை ஏன் நாங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏன் அதனை பங்கிட வேண்டும். வடக்கின் அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கியுள்ளோம். நல்லிணக்கமும், அபிவிருத்தியும் நாணயங்களின் இரு பக்கங்களை போன்றது. அதன்படி செயற்படுவோம். ஒரு வருடத்துக்கான பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி வடக்கில் இருந்தே அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பிப்பார் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யுத்த காலத்தை போன்று யுத்தத்தின் பின்னரான காலத்திலும் தமிழ் மக்கள் இனவாதங்களுக்கு முகம்கொடுத்தனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில், ராஜபக்ஷக்களை விடவும் மோசமானதா? அரசியல் ரீதியில் அழிந்துகொண்டு போகும் சவால்களுக்கு மத்தியில் இதுவரை காலம் தள்ளப்படாத இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வேண்டுமென்றால் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை தருகின்றோம். இனவாத தீனியை தேடிப்போக வேண்டாம். மாற்றங்களை பாருங்கள். வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமையளித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற அமர்வின் போது வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு மாற்றங்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை ஏன் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் காணவில்லை. குறைந்தது மனித உரிமைகள் ஆணையாளர் காணும் முன்னேற்றத்தையாவது காணுங்கள்.
வடக்கு மற்றும் கிழக்கில் இறந்த உறவினர்களை நினைவு கூரும் உரிமையை வழங்கியுள்ளோம். இதனை மாற்றமாக பார்க்கவில்லை. அத்துடன் 20 வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அது மாற்றமில்லையா? இவர்கள் யுத்தத்தை விடவும் சமாதானம், நல்லிணக்கதிற்கு பயப்படுகின்றனர்.
மிகத் தெளிவான அரசியல் இன்னும் இருக்கும் நாட்டில் ஒருபக்கத்தை போன்று மறுபக்கமும் உருவாகும். வடக்கில் பந்தை உயர்த்தும்போது தெற்கில் டேஸ் அடிக்கும் தரப்பினர் இருக்கின்றனர். அவ்வாறான நிலைமையிலேயே நாங்கள் ஆட்சியில் உள்ளோம். நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
நாங்கள் அரசாங்கம் என்ற ரீதியில் தமிழ், முஸ்லிம், சிங்களம் உள்ளிட்ட அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றோம். ஆகவே நீங்களும் மாறுங்கள்.
பிரேரணையை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உரையை ஆரம்பிக்கும்போதே இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் என்ற இனங்கள் இருக்கின்றன என்றே கூறினார். அதுவே நடக்கின்றது. நாங்கள் இலங்கையர் என்பது தொடர்பில் கதைக்கின்றோம். அதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டு வரலாற்றை கொண்டவர்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் எப்படி ஒன்றாக இருக்க முடியும். நல்லிணக்கம் அரசாங்கத்திடம் மட்டுமா இருக்க வேண்டும். தாம் சகல இனங்கள் தொடர்பிலும் சிந்திப்பதுடன், அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் ஒன்றாகவே கொண்டுசெல்வோம். ஒருபுறம் நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் மறுபக்கத்தில் அபிவிருத்தி இருக்க வேண்டும்.
அரசாங்கம் பொறுப்பேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியாகும் மாதம் வருகின்ற செப்டம்பரில் ஆரம்பமாகவுள்ளது. அதன் முதலாவது வேலைத்திட்டத்தை ஜனாதிபதி யாழ்ப்பாணத்திலேயே ஆரம்பிக்கவுள்ளளார்.
செப்டம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்திலும் இரண்டாம் திகதி முல்லைத்தீவிலும் நந்திக்கடலில் வட்டுவாகல் பாலம் அமைக்கப்படவுள்ளது. பின்னர் பளையில் விதை பண்ணைக்கான அடிக்கல் நாட்டவுள்ளார். வடக்கில் மக்கள் அதிகளவில் வாக்களித்து தேசிய மக்கள் சக்தியையே தெரிவு செய்துள்ளனர். அந்த மக்களின் ஆணையை ஏன் நாங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏன் அதனை பங்கிட வேண்டும். நாங்கள் அதிகளவில் வடக்கின் அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கியுள்ளோம். இதன்படி நல்லிணக்கமும், அபிவிருத்தியும் நாணயங்களின் இரு பக்கங்களை போன்றது. அதன்படி செயற்படுவோம்.
இப்போது இனவாத அரசியலுக்கு உணவு தேவையாக உள்ளது. இனவாதிகள் கடும் பசியில் இருக்கின்றனர். இந்த பசியில் அரசியல் செய்ய முடியாது என்றாகியுள்ளது. தெற்கில் ராஜபக்ஷக்கள் அப்படி நினைத்தார்கள். இப்போது அவர்களுக்கு இனவாத உணவு இல்லாமல் போயுள்ளது.
இன்று வடக்கில் முத்தையன்கட்டு சம்பவத்தை அவ்வாறு இனவாதமாக பயன்படுத்த முயன்றனர். சில குறைபாடுகள் நடக்கலாம். அதனை அரசாங்கத்தின் கொள்கையாக எப்படி இருக்க முடியும்.
மனித புதைகுழிகள் தொடர்பில் கதைக்கப்படுகின்றன. எங்களின் காலத்திலேயே அது தோண்டப்படுகின்றன. கொழும்பு துறைமுக பகுதியில் மீட்கப்பட்டவை யாருடையவை என்று தெரியவில்லை. அது தொடர்பான விசாரணைகள் எமது அரசாங்கத்தின் உதவியுடனேயே நடக்கின்றன.
யுத்த காலத்தை போன்று யுத்தத்தின் பின்னரான காலத்திலும் தமிழ் மக்கள் இனவாதங்களுக்கு முகம்கொடுத்தனர். அந்த காலத்திலும் சில அரசியல் கட்சிகள் ஒன்றிணையவில்லை. குறிப்பாக ஈபிடிபியுடன் இணையவில்லை. 2015 இல் டக்ளஸ் எதிர்க்கட்சியில் இருக்கும்போதும் அவருடன் இணையாதவர்கள் இப்போது அந்தக் கட்சியுடன் இணைகின்றனர். அப்படியென்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில், ராஜபக்ஷக்களை விடவும் மோசமானதா?
அரசியல் ரீதியில் அழிந்துகொண்டு போகும் சவால்களுக்கு மத்தியில் இதுவரை காலம் தள்ளப்படாத இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் வேண்டுமென்றால் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை தருகின்றோம். இனவாத தீனியை தேடிப்போக வேண்டாம். மாற்றங்களை பாருங்கள்.
சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து வடக்கு, கிழக்கிலும், மலையகத்திலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றீர்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இங்கே இல்லை. எங்கள் பக்கத்தில் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் இங்கு இருக்கின்றோம். நாங்கள் ஏற்றுக்கொண்டு பதில்களை வழங்குகின்றோம். எங்கே அவர்?
ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களித்தீர்கள். தயவுசெய்து கடந்த காலங்களை விடுத்து நாங்கள் செய்யும் வேலைத்திட்டங்கள் ஊடாக எங்களை மதியுங்கள். முதலில் மாற்றமடையுங்கள். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துங்கள். நீங்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு செல்லத்தயார் என்றார்.
No comments:
Post a Comment