நாடளாவிய ரீதியில் தொடரும் பணிப்புறக்கணிப்பு : ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள் : பல சுற்றுலா சேவைகளும் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 18, 2025

நாடளாவிய ரீதியில் தொடரும் பணிப்புறக்கணிப்பு : ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள் : பல சுற்றுலா சேவைகளும் பாதிப்பு

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

19 கோரிக்கைகளை முன்வைத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 4.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்தது.

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

இதனால் திங்கட்கிழமை (18) மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகமும் முற்றிலுமாக இன்று மூடப்பட்டுள்ளது. காலையில் எந்த தபால் ஊழியரும் வேலைக்கு வரவில்லை, காலையில் தபால் அலுவலகம் மற்றும் தபால் அறை மூடப்பட்டிருந்தது.

தபால் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததையும் கவனிக்க முடிந்தது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் மூடப்பட்டதால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பல சுற்றுலா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று அனைத்து தபால் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என்று ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், கருத்து தெரிவித்த தபால்மா அதிபர் ருவன் சத்குமார, தபால் ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதுபோன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என்று கூறினார்.
“3,000 உப தபால் நிலையங்கள் உள்ளன. அவை வேலைநிறுத்தத்தில் இல்லை. இருப்பினும், தபால் பொருட்களை வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம். தபால்மா அதிபர் என்ற முறையில், ஏற்பட்ட சிரமத்திற்கு இந்த நேரத்தில் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். 

பணிக்கு வரத் தயாராக உள்ளவர்கள் உள்ளனர். இருப்பினும், அச்சுறுத்தல்கள் உள்ளன. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

இதுபோன்ற நாசவேலை செயல்கள் நடந்தால், நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

IT தளங்கள் சீர்குலைந்துள்ளன. அவற்றை அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாக நாங்கள் பார்க்கிறோம். அப்படி நடந்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் முடக்கம்

தபால் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.

அதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் ஜே.பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டம் காலவரையறையின்றி தொடரும் என்றார்.

No comments:

Post a Comment