இணையம் ஊடாக கடன் வலையில் சிக்கியவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவி : வழங்குநர்களுக்கு சட்டப்பூர்வமாக பாடமொன்றை கற்பிப்போம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Monday, August 18, 2025

இணையம் ஊடாக கடன் வலையில் சிக்கியவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி இலவச சட்ட உதவி : வழங்குநர்களுக்கு சட்டப்பூர்வமாக பாடமொன்றை கற்பிப்போம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்

நிதி நெருக்கடியில் காணப்படும் நாடுகளைத் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு குழுக்களைக் கொண்ட இணைய வழி கடன் மாபியாக்கள் மூலம் நாட்டு மக்கள் பலியாக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இணையவழி கடன் மாபியாவால் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பான ரட சமக அபி எகட அமைப்பினருடன் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். Citizen voice வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

வட்டி விகிதத்தைக் குறிப்பிடாமல் கடனைப் பெற்றதன் பின்னர் அதிக வட்டியை அறவிட்டு, கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமாக அமையும் சமயங்களில், நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தல், மிரட்டல் விடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

முகநூல் வழியாக தகவல்களைத் திரிவுபடுத்தி, குடும்ப வாழ்க்கையைக் கூட சீரழிக்கும் வகையில் இந்த கடன் மாபியா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தக் கடன்களை வழங்கி வரும் நிறுவனங்கள் தொடர்பில் தகவல்கள் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி சட்டத்தரணிகளை நியமித்து, இந்நாட்டில் இணையம் வழியான கடன் மாபியாவால் பாதிக்கப்பட்ட சகல குடிமக்களுக்கும் இலவச சட்ட உதவிச் சேவைகளைப் பெற்றுத் தந்து, இந்த கடன் வழங்குநர்களுக்கு சட்டப்பூர்வமாக பாடமொன்றை கற்பிப்போம்.

சில வருடங்களுக்கு முன்பு இந்தக் கடன் மாபியா முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பிலான தகவல் வெளிக்கொணரப்பட்ட சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்தியினரும் தானும் இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரத்து குரல் எழுப்பினோம். இதன் காரணமாக இந்த சட்டவிரோத கடன் மாபியா ஓரளவுக்கு முடங்கிப் போனதோடு, புதிய சட்ட விதிகள் மூலம் கடுமையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டன.

என்றாலும் இந்தக் கடன் மாபியா இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணமுடிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் சட்ட நிபுணர்களை ஒன்றிணைத்து இந்த இணைய வழி கடன் மாபியாவில் சிக்கியுள்ள மக்களுக்கு இலவச சட்ட உதவிகளைப் பெற்றுத் தருவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment