முல்லைத்தீவ மாவட்டத்திற்கென விளையாட்டு கட்டடத் தொகுதியொன்று தேவையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானமொன்றினை முன்மொழிந்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை உரிய தரப்பினருக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 28.08.2025 இடம்பெற்ற நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு கட்டடத் தொகுதி இல்லாத நிலைகாணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பாராளுமன்றில் நான் பேசியுள்ளதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு கட்டடத் தொகுதி அமைக்கப்பட வேண்டுமெனப் பேசியிருக்கின்றேன்.
முல்லைத்தீவு மாவட்டமென்பது பின்தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது. இருப்பினும் இந்த மாவட்டத்திலும் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டு கட்டடத் தொகுதி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் .
இந்த விடயத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் ஆளுநர் ஆகியோரும் கரிசனையோடு செயற்படுகின்றனர்.
ஆகவே இந்த விளையாட்டு கட்டடத் தொகுதி முல்லைத்தீவு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டுமென தீர்மானமாக முன்மொழிகின்றேன் என்றார்.
இந்நிலையில் குறித்த தீர்மானம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இத்தீர்மானம் நடவடிக்கைக்காக உரிய தரப்பினருக்கு அனுப்பி வைப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment