(எம்.மனோசித்ரா)
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை குறித்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பொறுப்பாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்கவும் கைது செய்யப்படவுள்ளாரா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, விசாரணைகள் நடைபெற்று வருவதால், தன்னால் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சனிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 10 பேரடங்கிய குழு தனிப்பட்ட விஜயத்துக்காக லண்டன் சென்றமை தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22, 23 ஆகிய இரு தினங்களில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி செயலாளரினால் பொலிஸ்மா அதிபரிடம் இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் ஊழலுக்கு எதிரான மற்றும் விசேட விசாரணை பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய, அதன் பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்ட உள்ளக விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமையவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே பொலிஸ்மா அதிபரால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்த விசாரணை கையளிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி, அவரது பாரியார், முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர், அவரது வைத்தியர் மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.
லண்டன் செல்ல முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் இரு வெளிநாட்டு விஜயங்களில் பங்கேற்றிருந்தார். 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 - 16 வரை கியூபாவின் ஹமானா நகரில் இடம்பெற்ற ஜி77 மாநாட்டில் அவர் பங்குபற்றியிருந்தார்.
அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 - 21 வரை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரொன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோரிக் நகருக்குச் சென்றிருந்தார். இந்த விஜயங்களின் நிறைவிலேயே அவர் லண்டன் சென்றிருந்தார்.
இது குறித்த விசாரணைகளின்போது பல சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இந்த விஜயத்துக்காக ஜனாதிபதி செயலகம், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் என்பவற்றுக்கிடையில் கடித பரிமாற்றமும் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பரிமாற்றப்பட்டுள்ள இந்த அனைத்து கடிதங்களிலும் இது தனிப்பட்ட விஜயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இந்த விஜயம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் எவ்வித இராஜதந்திர சந்திப்புக்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கான செலவாக லண்டனிலுள்ள இலங்கை உயரஸ்தானிகரகத்தின் சராசரி மதிப்பீட்டுக்கமைய 40445 ஸ்டேலிங் பவுன் கோரப்பட்டிருக்கிறது. இது ஒரு கோடியே 62 இலட்சத்து 70573 இலங்கை ரூபாவாகும்.
இந்த மதிப்பீட்டில் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, வாகனங்களுக்கான வாடகை மற்றும் இதர செலவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை தவிர எவ்வித இராஜதந்திர சந்திப்புக்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
கோரப்பட்டிருந்த இந்த நிதி ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஜனாதிபதி செயலக நிதியிலிருந்து ஒரு கோடியே 62 இலட்சத்து 70573 இலங்கை ரூபா வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் செயலாளர் ஆகியோரின் தனிப்பட்ட செலவுகளுக்காக மாத்திரமே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளின் செலவுகளுக்காக மேலும் 32 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளமையும் ஜனாதிபதி செயலகத்தின் உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
விசாரணைகளில் இது இராஜதந்திர அழைப்பிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விஜயம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. இராஜதந்திர விஜயம் எனில் அங்கு ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வ வரவேற்பளிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு எவ்வித வரவேற்பும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்த செலவில் விமான பயணச்சீட்டுக்கான செலவுகள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. பொது சொத்துக்கள் சட்டத்துக்கமையவே முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிதியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு வழங்குவதற்கான அனுமதி ஜனாதிபதி செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் கைது செய்யப்படுவாரா என்பது அடுத்த கட்ட விசாரணைகளுக்கமையவே தீர்மானிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment