(இராஜதுரை ஹஷான்)
அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும். மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்களென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் நியமனம் குறித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரங்கள் குறித்து பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எடுத்துரைத்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு இலக்கிடப்பட்ட வளர்ச்சியை அடையாது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை பயன்படுத்திக் கொள்கிறது.
அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கே எதிரானதாக அமையும். மக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வெகுவிரைவில் சாதகமான தீர்மானத்தை எடுக்கலாம் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment