கடந்த 10 நாட்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட 6 நீதிபதிகளை பணிகளிலிருந்து இடைநிறுத்த நீதித்துறை சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் நீதித்துறை சேவையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொரட்டுவ நீதவான் திலின கமகே, மஹியங்கனை மேலதிக மாவட்ட நீதிபதி ரங்கனி கமகே, முன்னாள் மட்டக்களப்பு நீதவான் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் ஆகியோர் அவர்களின் தகுதிகாண் காலம் முடிவடைவதற்கு முன்னர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, 70 க்கும் மேற்பட்ட நீதிபதிகள் குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இந்த முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் நீதித்துறை சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நீதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட அவர்களின் தொழில்முறை கண்ணியத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு, அது தொடர்பாக விசேட அறிவுறுத்தல்களை வெளியிடவும் தயாராகி வருகிறது.
நீதித்துறை சேவை ஆணையத்தின் தற்போதைய தலைவராக தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன காணப்படுகின்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி காமினி அமரசேகர ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த ஆணையத்தின் இடத்தை நிரப்ப அரசியலமைப்புச் சபையிலிருந்து யாரும் நியமிக்கப்படவில்லை.
உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment