காசா மீதான உக்கிர தாக்குதல்களை தொடரும் இஸ்ரேல் இந்த மாத ஆரம்பத்தில் ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் கட்டார், உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு அது ஆர்வம் காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல் அன்சாரி டோஹாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘போர் நித்தத்திற்கான முன்மொழிவுக்கு இஸ்ரேலின் பதிலை தொடர்ந்து எதிர்பார்த்துள்ளோம். இந்தத் திட்டத்திற்கு ஹமாஸ் ஒரு வாரத்திற்கு முன்னரே இணங்கியது’ என்றார்.
கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட தற்போதைய முன்மொழிவில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பலஸ்தீன கைதிகள் பரிமாற்றத்துடன் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு முன்மொழியப்பட்டது. எனினும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு வலியுறுத்தும் இஸ்ரேல் இந்தத் திட்டத்திற்கு இணக்கத்தை வெளியிட தயக்கம் காட்டி வருகிறது.
‘போர் நிறுத்த ஒப்பந்தத்தை நோக்கி அனைத்து தரப்பினருடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், ஆனால் இஸ்ரேலின் அதிகாரபூர்வ பதில் எதுவும் இல்லை. ஏற்பதோ, நிராகரிப்பதோ அல்லது மாற்று திட்டத்தை முன்வைப்பதோ என்று எதுவும் இல்லை’ என்று அன்சாரி குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என்றும் இஸ்ரேலின் உத்தியோகபூர்வ பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் உத்தியோகபூர்வ பதில் இன்னும் வழங்கப்படாதபோதும், ‘எமது அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இஸ்ரேலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளின் கீழ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு’ இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரி இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரை கைப்பற்றும் வகையில் போர் நடவடிக்கையை விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்திருக்கும் இஸ்ரேல் அண்மைய நாட்களில் அங்கு தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதனையொட்டியே அது போர் நிறுத்த முயற்சிகளில் பின்வாங்கி வருகிறது.
காசா நகரின் தெற்கு சப்ரா புறநகர் மீது இஸ்ரேலிய படை நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. அல் இஸ்திஜபா பள்ளிவாசலுக்கு அருகே இருந்த பலஸ்தீன குழுவினர் மீதே வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காசா நகரில் பறநகரங்கள் மீது அண்மைய நாட்களாக இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் சரமாரி தாக்குதல்களை நடத்தி வருவதோடு அங்கிருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் தெற்கை நோக்கி மீண்டும் ஒருமுறை வெளியேறி வருகின்றனர்.
தெற்கு காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு கடந்த திங்களன்று கான் யூனிஸில் உள்ள நாசர் வைத்தியசலை மீது ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்ட இரட்டை வான் தாக்குதல்களில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 20 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் 75 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்ளில் 17 பேர் பலியாகி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் மேலும் 370 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 62,819 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 158,629 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் கடந்த மார்ச் அரும்பம் தொடக்கம் முற்றாக முடக்கி உள்ளது. அதற்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உதவி விநியோகங்களை பெறுவதற்கு கூடும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 2,140 ஆக அதிகரித்துள்ளது என்ற காசா சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறுபுறம் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் கடந்த 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் காசா போரில் பட்டினியால் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்களில் 117 பேர் சிறுவர்களாவர்.
No comments:
Post a Comment