யுத்த குற்றவாளிகளும், மொசாட் குழுவும் இலங்கைக்குள் வர இடமளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்கிறார் முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

யுத்த குற்றவாளிகளும், மொசாட் குழுவும் இலங்கைக்குள் வர இடமளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வசீம்,எம்.மனோசித்ரா)

இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமையானது முற்றிலும் தவறானதாகும். குறித்த தீர்மானம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறான தீர்மானத்தை எடுத்தமைக்கு பதிலாக வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்ததன் பின்னர் விசா பெறும் நடைமுறையை செயற்படுத்தியிருந்தால் ஒரு சுற்றுலாப் பயனிடம் இருந்து விசா கட்டணமாக குறைந்தது 10 டொலரை பெற்றிருக்கலாம். அவ்வாறான மாற்று வழிகள் குறித்து சிந்திக்காது எடுத்தவுடன் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. விசாவுக்கான ஆவணங்களுக்கேனும் 10 டொலரையாவது அறவிடாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதே எமது பிரச்சினையாகும். இந்த தீர்மானத்தால் அரசாங்கத்துக்கு கிடைக்கும் பாரிய தொகையிலான அந்நிய செலாவணி வருமானம் இழக்கப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேலுக்கும் இலவச விசாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எந்த அடிப்படையில் இஸ்ரேலுக்கும் இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டது. இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப் படுகொலைக்கு எதிராக பலம் மிக்க நாடுகள்கூட குரல் கொடுத்து வருகின்றன. இந்த காரணியை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகளுக்கிடையில் பிளவும் காணப்படுகிறது. ஆசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளையே கொண்டுள்ளன.

அண்மைய நாட்களாக ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன. இஸ்ரேல் படுகொலையில் ஈடுபடுகின்றது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இலங்கைக்கு இதற்கு முன்னர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டதற்கும் பலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதற்குமான வரலாறு காணப்படுகிறது.

சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி வரை பலஸ்தீனுக்கு ஆதரவான பலஸ்தீன் சுதந்திரத்திற்கு ஆதரவான வெளிநாட்டு கொள்கைகளையே இலங்கை அரசாங்கம் பின்பற்றி வருகிறது.

பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் சிக்கியிருந்து விடுதலைக்காக போராடிய மூன்றாம் உலக நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் பலஸ்தீனின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்துள்ளது.

ஆனால் தம்மை முற்போக்கு வாதிகள் எனக் கூறிக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் வெளிநாட்டு கொள்கையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பலஸ்தீனுக்காக குரல் கொடுத்த பாரிய அரசியல் சக்தியாக இவர்கள் காணப்பட்டனர். பலஸ்தீன் சுதந்திரத்துக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு இருக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் பலஸ்தீன் தூதரகத்துக்குச் சென்று ஜனாதிபதி அநுரகுமார் திஸாநாயக்க, அவர்களின் சுதந்திரத்திற்காக ஆதரவளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகளால் பலஸ்தீனுக்கு உணவு செல்வது கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் பலஸ்தீனில் மந்தப்போசணை அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் யுத்த குற்றம் புரிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறான பின்னணிக்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கு இலவச விசாவை வழங்குவதற்கு வெட்கமின்றி இந்த அரசாங்கம் எந்த அடிப்படையில் தீர்மானித்தது? இது எவ்வாறான வெளிநாட்டு கொள்கை? இது எவ்வாறு அணிசேரா கொள்கையாகும்?

அத்­துடன் சட்­ட­வி­ரோத­மான முறையில் அமைக்­கப்­பட்­டுள்ள இஸ்ரேலின் சபாத் ஹவுஸை தடை செய்­வ­தற்கு இது­வரை அரசாங்கம் நட­வ­டிக்கை எடுக்கவில்லை. ஆனால் இஸ்­ரே­லுக்கு எதிரான படங்­களை கைய­டக்க தொலைபேசியில் வைத்திருந்ததற்காக பயங்­க­ர­வாத தடைச் சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது­செய்­யப்­பட்டு 9 மாதங்­க­ளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இஸ்­ரேலின் சபாத் ஹவுஸில் இஸ்ரேல் இரா­ணு­வத்­தி­னரின் படங்­களும் பலஸ்­தீனில் கொலை செய்­யப்­ப­டு­ப­வர்­களின் படங்களுமே அங்கு காட்­சிப்­ப­டுத்தி வைக்கப்பட்டிருப்­ப­தாக தெரியவ­ரு­கி­றது.

இஸ்­ரேலின் மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து நட­வ­டிக்கை எடுத்­து­வரும் நிலையில் அர­சாங்கம் இஸ்­ரே­லுக்கு ஆதரவான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதனால் அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை என்ன என கேட்கிறோம்.

அதேநேரம் இஸ்ரேலுக்கு இலவச விசா கொடுப்பதன் மூலம் இஸ்ரேலின் யுத்தக் குற்றவாளிகளும் மொசாட் குழுவினரும் நாட்டுக்குள் வர இடமளிக்கப்படுகிறது. இது எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும். அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய விடயங்களை அரசாங்கமே மேற்கொள்கிறது. அதனால் இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment