தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் கடிதம் கையளித்துள்ள ஊடக அமைப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 12, 2025

தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் கடிதம் கையளித்துள்ள ஊடக அமைப்புக்கள்

(நா.தனுஜா)

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் 5 ஆவது ஆணையாளர் நியமனத்துக்கென மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் நாட்டில் இயங்கி வரும் முன்னணி ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் உத்தியோகபூர்வமாக கடிதமொன்றைக் கையளித்துள்ளன.

இந்த ஊடக அமைப்புக்களின் கூட்டிணைவில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை சமூகம், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள், தமிழ் ஊடக கூட்டிணைவு, முஸ்லிம் மீடியா போரம், ஊடக ஊழியர்கள் தொழிற்சங்கப் பேரவை மற்றும் ஊடக அமைப்புக்களின் தெற்காசிய பேரவை என்பன உள்ளடங்குகின்றன.

தகவல் அறியும் உரிமை என்பது இலங்கையில் ஆட்சியியல் மறுசீரமைப்புக்களின் முக்கிய கூறாகக் காணப்படுவதுடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும யுனெஸ்கோ போன்ற சர்வதேச கட்டமைப்புக்களின் பாராட்டையும் பெற்றிருப்பதாக அரசியலமைப்புப் பேரவைக்கான அக்கடித்தில் சுட்டிக்காட்டியுள்ள ஊடக அமைப்புக்கள், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முக்கிய பதவிகளுக்கு நேர்மையாகவும், நடுநிலைமையாகவும் செயற்படக்கூடிய நன்மதிப்பைப் பெற்ற நபர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளன.

அத்தோடு வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்துவதில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கும் நிலையில், அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுவோரின் நேர்மைத்தன்மை மற்றும் நன்மதிப்பு என்பன இன்றியமையாதனவாகும் எனவும் அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனவே தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கான நியமனங்களின்போது இவ்விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும், அப்பதவிகளுக்கு பொருத்தமான தகுதிவாய்ந்ந நபர்களை நியமிக்குமாறும் அந்த ஊடக அமைப்புக்கள் அரசியலமைப்புப் பேரவையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

No comments:

Post a Comment