ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான விமர்சனங்கள் சமூக நலனைக் கருத்திற் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படும் என கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் எம்.எச்.எம். பைறூஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இன்று (31) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மனிதன் தவறுக்கும், மறதிக்கும் இடையில் படைக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் நான் விடும் தவறுகளை குறைகளை உரிய முறையில் சுட்டிக்காட்டும் அதிகாரம் பொதுமக்களாகிய தங்களுக்கு உண்டு என்பதை உளப் பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் இந்தப் பிரதேச சபை எந்தவொரு வருமானமுமீட்டாத செயற்றிறனற்ற சபையாக எடுப்பார் கைப்பாவையாக காணப்பட்டதால் பொதுமக்களாகிய நீங்கள்தான் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தீர்கள். தற்போது அந்த நிலை படிப்படியாக மாற்றப்பட்டு பிரதேச சபை பொதுமக்களுக்கு அதி உச்ச சேவையை வழங்கி வருகிறது.
இதுவரை காலமும் தவிசாளர் கதிரையை அலங்கரித்தவர்கள் காணிப் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளாது அரசாங்க அதிபரோடு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது தமது நேர காலங்களை செலவிட்டிருந்தனர். இப்போது இறை உதவியால் அந்தப் பணி சிறப்பாக நடைபெறுகிறது.
கடந்த காலங்களில் தவிசாளர் கதிரையை அலங்கரித்தவர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் வாய் மூடி மௌனிகளாக இருந்தே காலம் கடத்தியிருந்தனர். இப்போது உங்கள் தவிசாளர் உங்களுக்காக பேசுகிறார். உங்களுக்காக முரண்படுகிறார். உங்கள் தேவைகளை முன்னிறுத்தி பேசுகிறார்.
பிரதேச சபையூடாக பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய எண்ணற்ற பணிகள் இன்னும் கிடப்பில் இருப்பதாக உணர்கிறேன்.
சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்களுக்கும், முகநூல் எழுத்தாளர்களுக்கும் எனது நேரத்தை வீணாக்க துளியளவும் எனக்கு உடன்பாடு கிடையாது.
யார் எதிர்த்தாலும் மக்கள் பணி தொடரும். தவிசாளர் கதிரையின் பெறுமதியை கனதியை மக்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. தவிசாளர் மக்களோடு, மக்கள் தவிசாளரோடு.
No comments:
Post a Comment