எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ள புனித ஹஜ் கடமைக்கான பணிகளை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளதாக ஹஜ் குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
அடுத்த வருட ஹஜ்ஜிற்கான பணிகளை சவூதி அரேபிய அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. அதற்கு சமாந்தரமாக இலங்கையிலும் ஹஜ் கடமைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் ஊடாக இறுதிக் கட்டத்தில் ஏற்படுகின்ற தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கமைய 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற உத்தேசித்துள்ளவர்கள் தங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இந்த பதிவினை மேற்கொள்வதுடன், பதிவு கட்டணமாக மீளளிக்கப்படாத 5,000 ரூபாவினை 2327593 எனும் இலங்கை வங்கியின் ஹைட் பார்க் கிளையிலுள்ள திணைக்களத்தின் ஹஜ் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைப்பிலிட்டமைக்கான பற்றுச்சீட்டினை திணைக்களத்திற்கு சமர்ப்பித்து அடுத்த வருடத்திற்கான ஹஜ் பயணத்தினை உறுதி செய்யுமாறும் யாத்திரீகர்களிடம் வேண்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இதுவரை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த ஜுன் மாதம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றிய ஹாஜிகளிடம் தாங்கள் பயணித்த முகவர் நிறுவனங்கள் தொடர்பில் ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின் தகுந்த ஆதாரத்துடன் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த முறைப்பாடுகளை நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவே சமர்ப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment