பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்துவை நீக்க பரிந்துரை : இலங்கை வரலாற்றில் முதன் முறை எடுக்கப்பட்ட தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 22, 2025

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்துவை நீக்க பரிந்துரை : இலங்கை வரலாற்றில் முதன் முறை எடுக்கப்பட்ட தீர்மானம்

பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) பாராளுமன்றிற்கு அறிவித்தார்.

இலங்கை சனநாயக அரசின் அரசமைப்புச் சட்டத்திலும், நிறுவனக் கட்டமைப்பிலும் முக்கியமான இடத்தை வகிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு விடயத்தை இன்று பாராளுமன்றத்திற்கு எடுத்துக் கூற விரும்புவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று தெரிவித்தார்.

அதிகாரிகள் நீக்கல் (செயல்முறை) சட்டத்தின் 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டத்தின் கீழ், தற்போதைய பொலிஸ் மா அதிபரை அகற்றும் காரணங்களை விசாரிக்க மற்றும் அறிக்கையிட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்தச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் நடைமுறைகளுக்கிணங்க அமைக்கப்பட்ட அந்த விசாரணைக் குழுவின் அதிகாரபூர்வ முடிவுகள் தற்போது தமக்கு கிடைத்துள்ளதாகவும், அந்தக் குழுவின் நேர்த்தியான பணிநேர்மை, நீதிமுறை நம்பிக்கை மற்றும் சட்டமேற்பாட்டுக்கான அர்ப்பணிப்பை பாராளுமன்றத்தின் சார்பில் பாராட்ட விரும்புவதாகவும் சபாநாயகர் இங்கு அறிவித்தார்.

குறித்த விசாரணைக் குழு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பத்மன் சூரசேன தலைமையில், மேன்முறையீடு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவல, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் லலித் எகநாயக்க ஆகியோர் அதன் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.

இந்த குழு நடத்திய விசாரணையின் முடிவில், குறித்த அதிகாரி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டத்தின் பிரிவு 8(2) இற்கு அமைய குற்றவாளி என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு பொலிஸ் மா அதிபரை அகற்ற உத்தியோகபூர்வமாக பரிந்துரை செய்யும் அறிக்கையை வழங்கும் சந்தர்ப்பம் இதுவே முதன்முறையாகும் என்பதையும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

குறித்த சட்டத்தின் பிரிவு 17 இற்கிணங்க, குறித்த குற்றவாளி என்பது தொடர்பான தீர்மானம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், இது குறித்து விவாதித்து வாக்களிக்க நாளொன்று அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நற்பண்பை உறுதிப்படுத்தும் வகையில், பாராளுமன்ற செயலாளரிடம், குறித்த அறிக்கையை பாராளுமன்ற ஆவணமாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அது விரைவில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று உத்தியோகபூர்வ மொழிகளில் மூலப்பிரதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஆங்கில மொழியில் மட்டுமே வெளியிடப்படும் தற்போதைய அறிக்கையின் மென்பிரதி, பாராளுமன்ற இணையதளத்திலும் பதிவேற்றப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.

No comments:

Post a Comment