யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை மற்றும் துணுக்காய் பகுதியில் புலிகளின் வதைமுகாம் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையிடப்பட்ட இடங்கள் தொடர்பிலும் விசாரனைகள் நடத்தி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ். சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருண் சித்தார் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக்கூறி தற்பொழுது செம்மணி தொடர்புபடுத்தப்படுகின்றது. அது தொடர்பான விசாரணைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் விடுதலைப் புலிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆட்கொணர்வு வழக்குகூடத் தாக்கல் செய்ய முடியாது என்ற நிலைப்பாடு சட்டத்தில் காணப்படுகின்ற பொழுது எங்களுக்குரிய நீதியினை பெற்றுத் தருபவர்கள் யார் என்று அவர் கேள்வி எழுப்புகின்றார்.
ஒரு சட்டரீதியான இராணுவத்திற்கெதிராக மட்டுமே ஆட்கொணர்வு மனுப்போட முடியும் என்றும் புலிகள் போன்ற சட்டவிரோத அமைப்புக்கெதி்ராக ஆட்கொணர்வு மனுப்போட சட்டத்தில் இடமில்லை என்றும் எமக்குத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் துணுக்காய்ப் பகுதியிலுள்ள நெற்களஞ்சிய கட்டடத் தொகுதியிலுள்ள புலிகளின் சித்திரவதை முகாமுக்கு கொண்டுவரப்பட்டு, கொலை செய்யப்பட்டு வவுனிக்குளம் சிவபுரம் பகுதியில் எரியூட்டி எரிக்கப்பட்டதாகவும், அவர்களுடைய சாம்பல்கூட நீரில் கரைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததோடு, எங்களுக்குரிய நீதியை நாங்கள் தேடிக்கொள்ளும் அதேவேளை அதை எப்பொழுது எங்கே கோர வேண்டும் என்பதையும் நாமே முடிவுசெய்வோம் எனவும் தெரிவித்தார்.
எமக்கான நீதியை செம்மணி தோண்டும்போது கோரக்கூடாது என எமக்கு உத்தரவிட எவருக்கும் உரிமை கிடையாது. வலியும் இழப்புக்களின் கனமும் பாரமும் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும்.
எங்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தனது மனைவியின் தந்தை உட்பட, செல்லர் தங்கத்துரை, செல்லர் அரியதுரை, செல்லர் புவனேஸ்வரன் ஆகிய மூன்று தனது உறவினரை 1990 ஆம் ஆண்டு பகுதிகளில் புலிகள் கடத்தி காணாமலாக்கி துணுக்காயில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் என அவர் புலிகள் மீது குற்றஞ்சாட்டுகின்றார்.
No comments:
Post a Comment