யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொதுச்சந்தையில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய நபரை கொண்டு செல்வதற்கு மருதங்கேணி வைத்தியசாலையில் அம்பியூலன்ஸ் (நோயாளர் காவு வண்டி) உதவி மறுக்கப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற பொதுச் சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக நபர் ஒருவர் இன்று (07) காலை வருகை தந்துள்ளார்
மரக்கறிகளை கொள்வனவு செய்து கொண்டிருந்த பொழுது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கி கீழே விழுந்த நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்தோடியுள்ளது.
இதனைக் கண்ட குறித்த சந்தையில் இருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாக அருகில் உள்ள மருதங்கேணி வைத்தியசாலைக்கு சென்று சம்பவத்தை எடுத்து கூறியதுடன் அம்பியூலன்ஸ் வண்டியையும் உதவிக்கு அழைத்துள்ளார்.
மருதங்கேணி வைத்தியசாலையில் காணப்பட்ட அம்பியூலன்ஸ் சாரதியிடம் விடயத்தை தெரியப்படுத்தியவேளை வைத்தியரை ஒருமுறை கேட்டுச் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இப்போது அம்பியுலன்ஸை செலுத்த முடியாது என்றும் வைத்தியர் எழும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு, 1990 அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் மருதங்கேணி வைத்தியசாலை அம்பியூலன்ஸ் சாரதியால் கூறப்பட்டுள்ளது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்றுவதற்காக 1990 இலக்கத்திற்கு அழைத்து அம்பியுலன்ஸை வரவழைத்ததாக குறித்த நபர் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக மக்கள் மருத்துவ தேவைகளை பெறுவதில் மருதங்கேணி வைத்தியசாலையில் தொடர்ந்து சிக்கல்களை எதிர்நோக்கி வருவதுடன், இவ்வாறு அவசர தேவைக்கு உதவாத இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு பொதுமகன் என்ற வகையில் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment