(செ.சுபதர்ஷனி)
நாட்டில் வருடாந்தம் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் 35 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுவர் புற்றுநோயாளர்கள் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இந்திரா டிரேடர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் நோயாளர்களுக்கான ஐந்து மாடிக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (3) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், மருத்துவமனை கட்டுமானப்பணிகளால் சுகாதார அமைச்சு பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. சில கட்டிடநிர்மாண பணிகள் சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் ஒரு சில காரணங்களால், அப்பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் கட்டுமானப்பணிக்காக மதிப்பிடப்பட்ட தொகையை விட 50 முதல் 60 சதவீத பணத்தை மேலதிகமாக வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில அரச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும்போதும் காலதாமதம் ஏற்படுகிறது.
ஆலோசனை மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் ஒப்பந்த திட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியும் கவனம் செலுத்தியுள்ளார். திறைசேரியிலிருந்து பணத்தை விடுவித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றால் மாத்திரமே மதிப்பீட்டின்படி பணிகளை நிறைவு செய்ய முடியும்.
எதிர்வரும் காலங்களில் புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் அத்திட்டம் முழுமை பெறும் வரையான காலம் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.
நாட்டில் வருடாந்தம் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், அவர்களில் 35 சதவீதமானோர் அதாவது 800 பேர் சிறுவர் புற்றுநோயாளர்களாவர்.
அந்த வகையில் வருடாந்தம் மஹரகம தேசிய வைத்தியசாலையில் 11 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். புற்றுநோய் சிகிச்சைக்கான உபகரணங்களை வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் அரசாங்கத்தால் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு விரைவில் 5 புதிய லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியும் மருத்துவமனைக்கு மேலும் இரு லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்களை வழங்க உள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் மேலும் எளிதாக்கும்.
மஹரகம வைத்தியசாலையின் சமையலறை ஒரு முன்னோடி திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனை சமையலறையின் நிலைக்கு மேம்படுத்தப்படும். நோயாளிக்கு ஏற்ற உணவுத் திட்டத்தை வழங்குவதற்குப் பதிலாக, நோயாளியின் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களுடனும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்த மருத்துவமனையில் ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது என்றார்.
No comments:
Post a Comment