காசாவில் 48 மணி நேரத்தில் 300 இற்கும் அதிக பலஸ்தீனர்கள் உயிரிழப்பு : போர் நிறுத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இஸ்ரேலின் தாக்குதல்களும் தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 3, 2025

காசாவில் 48 மணி நேரத்தில் 300 இற்கும் அதிக பலஸ்தீனர்கள் உயிரிழப்பு : போர் நிறுத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இஸ்ரேலின் தாக்குதல்களும் தீவிரம்

காசாவில் கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 300 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இந்தக் காலப்பகுதியில் இஸ்ரேல் ’26 படுகொலைச் சம்பவங்களில்’ ஈடுபட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த நிலையில் அது தொடர்பில் ஹமாஸ் அமைப்பு ஆராய்ந்துவரும் சூழலிலேயே இஸ்ரேல் தாக்குதல்களை உக்கிரப்படுத்தியுள்ளது.

இதில் நேற்று (3) காலை தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவில் நடத்தப்படும் சர்ச்சைக்குரிய காசா உதவி விநியோக இடத்தில் உதவிக்காக காத்திருந்த 33 பேரும் அடங்குகின்றனர்.

தெற்கு காசாவின் மவாசியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதலில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கும் அதேநேரம் காசா நகரின் மேற்கே இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் முஸ்தபா ஹாபிஸ் பாடசாலையில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 16 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த பாடசாலை கட்டடத்தில் அடைக்கலம் பெற்றிருந்த அஹமது மன்சூர் என்பவர் கூறும்போது, ‘கடுமையான வான் தாக்குதலுக்கு மத்தியிலேயே நாம் விழித்துக் கொண்டோம். அதனை பூகம்பம் போல் உணர்ந்தேன். ஆளில்லா விமானத் தாக்குதல் என்று மக்கள் கூறியபோதும், பயங்கர சத்தம் கேட்டதோடு இடைவிடாது செல் குண்டுகள் விழுந்தன. ஏவுகணைகள் பெரும் அழிவை ஏற்படுத்தியதோடு அனைத்தும் தீயில் கருகின. பாதிக்கப்பட்டவர்கள் தீக்காயத்துடன் உதவி இன்றி வேதனைப்பட்டனர். இங்கு எம்மை காப்பாற்ற யாரும் இல்லை’ என்றார்.

காசா அரச ஊடகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 48 மணி நேரத்தில் தற்காலிக முகாம்கள் மற்றும் சன நெரிசல் மிக்க ஆயிரக்கணக்கான கூடாரங்கள் இருக்கும் இடம்பெயர்வு மையங்கள், பொதுமக்கள் ஓய்வு இடங்கள், மக்கள் தங்கி இருக்கும் நிலையில் வீடுகள், சந்தைகள் மற்றும் பட்டினியில் உணவு தேடும் மக்கள் என பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் டெயிர் அல் பலாவில் உதவி விநியோக இடத்தில் அடிப்படையான உணவு உதவியை பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக உயிர் தப்பியவர்கள் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் விபரித்துள்ளனர்.

இந்த உதவி விநியோகம் அமெரிக்க ஒப்பந்ததாரர்களின் பாதுகாப்புடன் காசா மனிதாபிமான நிறுவனம் என்ற அமைப்பால் முன்னெடுக்கப்படுகிறது. 

பட்டினியில் உணவைப் பெற முண்டியடிக்கும் பலஸ்தீனர்கள் மீது அந்த பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் துப்பக்கிச்சூடு நடத்துவது மற்றும் கையெறி குண்டுகளை வீசும் வீடியோ பதிவுகள் மற்றும் சாட்சியங்களை ஏ.பீ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விநியோக இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான தாக்குதல்களில் 600 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய பரிந்துரை ஒன்றை ஆராய்ந்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று இஸ்ரேலின் பேரழிவு மிக்க போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மத்தியஸ்தர்களிடம் இருந்து முன்மொழிவுகள் கிடைத்ததாகவும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவது மற்றும் உடன்படிக்கை ஒன்றை எட்டும் முயற்சியாக முரண்டபாடுகளை களைவதற்கு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

காசா போரை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலியப் படை அங்கிருந்து வாபஸ் பெறும் உடன்படிக்ைக ஒன்றை எட்டுவதற்கு முயன்று வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் இணங்கியதாக குறிப்பிட்ட டிரம்ப், நிலைமை மேலும் மோசடையும் முன் அதனை ஏற்கும்படி ஹமாஸ் அமைப்பையும் வலியுறுத்தி இருந்தார். போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கும் காசாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் அண்மைய நாட்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்தும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த முன்மொழிவு தொடர்பில் ஹமாஸின் பதில் இன்று (04) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, அது சாதகமாக இருந்தால் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு இஸ்ரேலிய பிரதிநிதிகள் நேரடி பேச்சுவார்த்தையில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போர் நிறுத்த முயற்சியில் எகிப்து மற்றும் கட்டார் நாடுகள் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

புதிய போர் நிறுத்த முன்மொழிவில் காசாவில் உயிருடன் உள்ள 10 பணயக்கைதிகள் மற்றும் 18 சடலங்களை விடுப்பதற்கும் அதற்கு பகரமாக பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காசாவில் தற்போது எஞ்சி இருக்கும் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment