பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு, விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் : நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி - News View

About Us

About Us

Breaking

Thursday, July 3, 2025

பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு, விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் : நாட்டில் அதிகரிக்கும் நாய்க்கடி

நாட்டில் நாய்க்கடி அதிகரிப்பதற்கு, அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கை மற்றும் கால்நடைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பொதுமக்களிடம் புரிதல், போதிய கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்மையே முக்கிய காரணம் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள என்.எம்.என். தர்ஷனி திசாநாயக்க, 2000 ஆம் ஆண்டு முதல் சுகாதார அமைச்சு ரேபிஸ் வைரஸ் எனப்படும் விசர் நாய் கடி நோயை ஒழிக்க நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

விசர் நாய் கடி கட்டளைச் சட்டத்தின்படி, தெரு நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களைப் பிடிக்கவோ அல்லது கருணைக் கொலை செய்யவோ அதிகாரிகள் ஒரு காலத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மனிதர்களுக்கு விசர் நாய் கடி நோய் ஏற்படுவதை தடுக்க சுகாதார அமைச்சு முக்கிய பங்காற்றி வருகிறது என்றாலும் கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட விசர் நாய் கடி கட்டுப்பாட்டிற்கான பொறுப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் (DAPH) கீழ் வருகிறது.

2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை, அரசாங்க கொள்கையின்படி நாய்களை பிடிக்கும் நடைமுறை இடைநிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக, நாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்க சுகாதார அமைச்சு கருத்தடை மற்றும் தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

ஒரு கட்டத்தில், கால்நடை இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த டெப்போ - புரோவெரா ஊசியைப் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த முயற்சி பின்னர் நிறுத்தப்பட்டது.

தற்போது, சுகாதார அமைச்சு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 33,000 நாய்களுக்கு கருத்தடை செய்கிறது. இருப்பினும், நாய்களின் எண்ணிக்கையை முறையாகக் கட்டுப்படுத்த இந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு குறைந்தது 100,000 ஆக அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்.

தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக, சரியான குப்பைகள் அகற்றப்பட வேண்டும். வீதியோரங்களில் குப்பைகளை கொட்டுவதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

கால்நடைகளின் நடத்தை தொடர்பில் குறிப்பாக சிறுவர்களுக்கு பொது விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவை அதிகரிக்க வேண்டும். நாய் கடியில் இருந்து எவ்வாறு தடுப்பது என்பதை பொது மக்கள் கற்றுக் கொள்வதும், நாய்கள் ஏன் கடிக்கக்கூடும் என்பதற்கான காரணங்களைப் புரிந்து கொள்வதும் மிக அவசியம்.

இது சம்பந்தமாக, கால்நடை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் கல்வித் திட்டங்களில் கல்வி அமைச்சு தீவிர நாட்டம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment