அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெனாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% சுங்க வரி (reciprocal tariff) விதிக்க தீர்மானித்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அறிவித்துள்ள நிலையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வெள்ளை மாளிகையால் அனுப்பப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஏப்ரல் 02ஆம் திகதி, இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படுவதாக அறிவித்த நிலையில் தற்போது அது 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே காணப்படும் வரிகளுக்கு மேலதிகமாகவே இவ்வரி விதிப்பு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment