காசாவில் இஸ்ரேலிய படை தொடர்ந்து குண்டு மழை பொழிந்துவரும் நிலையில் அமெரிக்கா சென்றிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (07) வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கும் அங்குள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதே தீவிரத்தில் நடத்தி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் குறைந்தது 105 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 356 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று (07) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
நேற்று மதியம், காசா நகரில் அல் தவுப் பகுதியில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அங்கு தங்கி இருந்த ரம்வுய் குடும்பத்தைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. அந்தக் குடும்பத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக தெற்கு காசாவில் அமெரிக்க ஆதரவு உதவி விநியோக இடத்திற்கு அருகே இஸ்ரேலியப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உதவி பெறுவதற்காக அங்கு சென்ற இருவர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் வரை காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் முடக்கி வரும் நிலையில் சர்ச்சைக்குரிய இந்த உதவி விநியோக மையங்களில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் திரண்டு வருகின்றனர்.
அடிப்படை உதவிகள் இன்றி இவ்வாறு கூடும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 700 ஐ தாண்டி இருப்பதாக காசா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரம் அடைந்திருக்கும் சூழலிலும் இந்த வாரத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கடந்த ஞாயிறன்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்புடனான சந்திப்பு கட்டாரில் இடம்பெற்றுவரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உதவக் கூடும் என்று நெதன்யாகு முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக கடந்த ஜனவரியில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவி ஏற்றது தொடக்கம் நெதன்யாகுவின் மூன்றாவது அமெரிக்க விஜயமாக இது உள்ளது.
மறுபுறம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் கட்டாரில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தனர். கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தை சாதகமாக இருப்பதாக இஸ்ரேல் தரப்பு கூறியதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆரம்பகட்ட சந்திப்பில் முடிவு ஒன்று எட்டப்படாது முடிந்ததாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மனிதாபிமான உதவி தொடர்பான விடயம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய தரப்பு குறிப்பிட்டபோதும் அது பற்றி மேலதிக விபரங்கள் எதினையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க ஆதரவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக பணயக் கைதிகளை விடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து வாபஸ் பெற்று போர் முழுமையாக முடிவுக்கு வருவது பற்றி ஹமாஸ் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு முன்னர் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பது ஹமாஸின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆனால் ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் மறுத்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பமான காசா போரில் இதுவரை கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 57,523 ஆக அதிகரித்திருப்பதோடு 136,617 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது தொடக்கம் குறைந்தது 6,964 பேர் கொல்லப்பட்டு மேலும் 24,576 பேர் காயமடைந்துள்ளனர்.
‘இறைவன் நாடினால் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படும்’ என்று வடக்கு காசாவின் ஜபாலியாக நகரில் இருந்து இடம்பெயர்ந்த 30 வயது முஹம்மது அல் சவல்ஹா, ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டார். ‘மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில் போர் நிறுத்தம் ஒன்றை எம்மால் காண முடியவில்லை. இரத்தம் சிந்தப்படுவதை போர் நிறுத்தம் ஒன்று முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment