வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெடிவச்சகல்லு கிராம அலுவலர் பிரிவில் திரிவச்சகுளத்தின் கீழான தமிழ் மக்களின் வயல் நிலங்கள் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி (எல்) திட்டத்தினூடாக சுமார் 1000 ஏக்கர் வரையான பாரிய வனப் பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், இது தொடர்பில் அப்பகுதிக்குரிய வன வளத் திணைக்கள உத்தியோகத்தருடனும், வவுனியா வடக்கு பிரதேச செயலருடனும் கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, வெடிவச்சகல்லு கிராம அலுவலர் பிரிவில், திரிவைச்சகுளம் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களால் தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன், மகாவலி (எல்) வலயத்திட்டத்தினூடாக பாரிய வனப் பகுதிகளும் பெரும்பான்மை இனத்தவர்களால் பெருமளவில் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த பகுதியை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக பயிர்ச் செய்கை மேற்கொண்டுவந்த திரிவைச்சகுளம் பகுதியை முற்றாக அபகரித்துள்ள பெரும்பான்மையினத்தவர்கள் அங்கு நெற்பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருவதை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
அத்தோடு மகாவலி (எல்) வலயத் திட்டத்தினூடாக திரிவைச்சகுளம் பகுதியை அண்டியுள்ள பாரிய வனப் பகுதிகளில், சுமார் 1000 ஏக்கர் வரையில் பெரும்பான்மையினத்தவர்களால் சட்டவிரோத காடழிப்பு மேற்கொள்ளப்பட்டு அபகரிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகப் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் வன வளத் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மேலும் இது தொடர்பில் உரிய அமைச்சுக்களுடனும் பேசுவதுடன், நாடாளுமன்றிலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
குறித்த கள விஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன், சமூக செயற்பாட்டாளர் பூபாலசிங்கம், வெடிவைத்தகல்லு கிராம மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment