காசாவில் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, மக்களை வெளியேற்றும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் அழைப்பு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார்.
இருபது மாதங்களுக்கு மேல் நீடிக்கும் காசா போரை நிறுத்தும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ட்ரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளார். ‘காசாவில் உடன்படிக்கை ஒன்றை எட்டி, பணயக்கைதிகளை மீட்க வேண்டும்’ என்று ட்ரம்ப் தனது ட்ருத் சோசியல் (Truth Social) சமூக வலைத்தளத்தில் நேற்று (29) பதிவிட்டிருந்தார்.
காசாவில் உடன்படிக்கை ஒன்று தொடர்பில் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமையும் நம்பிக்கையை வெளியிட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘ஒரு வாரத்துக்குள் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டக் கூடும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு தொடர்ந்து அழுத்தங்கள் அதிகாரித்து வருகின்றன. காசாவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 49 பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு உடன்படிக்கை ஒன்றுக்குச் செல்லும்படி இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடந்த சனிக்கிழமையும் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானவர்கள் பேரணி நடத்தினர்.
பணயக்கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியபடி மக்கள் மத்திய டெல் அவிவில் திரண்டனர்.
‘ஈரானுடனான போர் உடன்படிக்கை ஒன்றுடன் முடிவுக்கு வந்தது. அதேபோன்று காசா போரும் பணயக்கைதிகள் அனைவரையும் மீட்கும் உடன்படிக்கை ஒன்றுடன் முடிவுக்கு வர வேண்டும்’ என்று இஸ்ரேலின் பணயக்கைதிகள் மற்றும் காணாமல்போனவர்கள் அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக மத்தியஸ்தர்கள் திரைமறைவில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நெதன்யாகு கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார். எனினும் போரை முறையாக முடிவுக்குக் கொண்டுவரும் எந்த ஒரு பேச்சுவார்த்தையையும் அவர் நிராகரித்துள்ளார்.
ரோய்ட்டஸ் செய்தி நிறுவனத்திற்கு பேசிய ஹமாஸ் அதிகாரி ஒருவர், தமது அமைப்பு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் எந்த ஒரு உடன்படிக்கையும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலியப் படை காசாவில் இருந்து வெளியேறுவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காசா போரின் முன்னேற்றம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இராணுவம் தனது நோக்கத்தை நெருங்கி இருப்பதாக இஸ்ரேலிய மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் காசா போர் புதிய பகுதிகளுக்கு பரவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள பானி சுஹைலா பகுதியில் இஸ்ரேலிய புல்டோசர் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படை குறிப்பிட்டுள்ளது. 105-எம்.எம். அல் யாசின் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதாக அந்தப் படை குறிப்பிட்டிருந்தது. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் உடன் வெளியாகவில்லை.
தெற்கு காசாவில் கடந்த வாரம் இடம்பெற்ற ஒற்றை தாக்குதலில் ஏழு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் கான் யூனிஸ் நகரில் உள்ள அல் மவாசி பகுதியை நோக்கி தெற்காக வெளியேறிச் செல்லுபடி இஸ்ரேல் இராணுவம் பல குடியிருப்பாளர்களையும் குறுஞ்செய்தி மூலம் அறிவித்தியுள்ளது. அல் மவாசியை மனிதாபிமானப் பகுதியாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தபோதும் தற்போது காசாவில் எந்தப் பகுதியும் பாதுகாப்பானது இல்லை என்று ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘இந்தப் பகுதிகளில் இஸ்ரேலியப் படை கடுமையான படை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதோடு பயங்கரவாத அமைப்புகளின் திறன்களை அழிப்பதற்கு இந்த இராணுவ நடவடிக்கை தீவிரமானதாகவும், கடுமையானதாகவும் நகர மையத்தை நோக்கி விரிவுபடுத்தப்பட்டதாகவும் இருக்கும்’ என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெளியேற்ற உத்தரவு ஜபலியா பகுதி மற்றும் காசா நகரில் பெரும் பகுதிகளை உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜபலியாவில் நேற்று அதிகாலை இஸ்ரேலின் குண்டுவீச்சுகள் தீவிரம் அடைந்திருந்ததாக குடியிருப்பாளர்கள் மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்தத் தாக்குதல்களில் பல வீடுகள் அழிக்கப்பட்டதோடு குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள அல் மவாசி பகுதிக்கு அருகே இடம்பெயர்ந்த மக்களின் கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேலியப் படை நேற்றுக் காலை தொடக்கம் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் ஐவர் உதவிக்காக காத்திருந்த நிலையில் இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் பலியாகி இருப்பதாகவும் காசா மருத்துவ வட்டாரத்தை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் முடக்கி இருக்கும் நிலையில் அமெரிக்க ஆதரவில் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக இடங்களிலேயே ஒன்றுகூடும் மக்கள் மீது இஸ்ரேலியப் படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் நீடிக்கும் முற்றுகை மற்றும் கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment