சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் வெளியேற்றபட்ட அர்ச்சுனா - News View

About Us

About Us

Breaking

Friday, May 9, 2025

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் வெளியேற்றபட்ட அர்ச்சுனா

சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் படைக்கல சேவிதரால் சபையில் இருந்து வெளியேற்பட்டார்.

பாராளுமன்றம் நேற்று (08) காலை 9.30 மணிக்கு கூடியது முதல் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பல்வேறு விடயங்களுக்கும் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். 

எனினும் அவருக்கு எதிராக ஏற்கனவே அமுலில் உள்ள அவரின் உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான தடை காரணமாக அவரின் கருத்துக்கள் வெளிவரவில்லை.

இவ்வாறாக ஒவ்வொரு விடயங்களுக்கும் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியும், கேள்விகளை முன்வைத்தவாறும் அர்ச்சுனா இருந்த நிலையில் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்கு விதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க உரையாற்றிக் கொண்டிருந்தபோது அர்ச்சுனா தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினைகளையும் இடையூறுகளையும் ஏற்படுத்தினார்.

இதனால் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, அர்ச்சுனாவுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த அரவிந்த் செனரத் எம்.பி. அர்ச்சுனாவை இரு தடவைகள் எச்சரித்தபோதும் அவர் எதனையும் காதில் வாங்கி கொள்ளவில்லை. அவரை சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அர்ச்சுனா அதனை கருத்திற்கொள்ளவில்லை. இந்நிலையில் அவரை சபையிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அறிவித்தார்.

ஆனால் அர்ச்சுனா சபையில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் கட்டளையில் உள்ள விடயத்தை அர்ச்சுனாவுக்கு அறிவித்த சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் படைக்கல சேவிதர்களினால் வெளியேற்றப்படநேரிடும் எனவும் கூறினார்.

இதனையடுத்து கூச்சல் குழப்பங்களுக்கிடையில் அர்ச்சுனா சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

No comments:

Post a Comment