இன்று (09) காலை மாதுரு ஓயா நீர்த் தேக்கத்தில் வீழ்ந்த விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்தில், 6 படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பின்னர், ஹெலிகொப்டரில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதில் விமானப்படை ஆயுதப் பிரிவு வீரர்கள் இருவர் மற்றும் இராணுவ விசேட படையணியைச் சேர்ந்த 4 பேர் ஆகிய 6 பேரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) காலை மாதுறுஓயா இராணுவ முகாமில் பயிற்சி பெற்ற படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கெடுத்த இலங்கை விமானப்படையின் 212 பெல் வகை ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்துது.
காலை 6.46 மணிக்கு ஹிங்குரக்கொட விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம், மாதுறு ஓயா இராணுவ விசேட படையணிக்கு சென்று இராணுவ விசேட படையணியைச் சேர்ந்த 6 பேரை ஏற்றிக்கொண்டு, விழாவை அலங்கரிக்க மீண்டும் புறப்பட்டு சிறிது நேரத்தில் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக, இலங்கை விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குறூப் கெப்டன் எரந்த கீகனகே வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற வேளையில் விமானிகள் 2 பேர் மற்றும் விமான பணியாளர்கள் உள்ளிட்ட 12 பேர் ஹெலிகொப்டரில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆரம்பகட்ட சிகிச்சைக்காக அரலகன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த 6 பேர் மரணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் பொலனறுவை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை விமானப்படை தளபதியினால் 9 பேர் கொண்ட விசேட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குறூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment