உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
11 ஆவது பிரதிவாதியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ள மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ள பின்னணியில் இவ்வாறு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (14) மீளவும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிரதிவாதிகள் 24 பேரும் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில், அவர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரத்னவேல், கஸ்ஸாலி ஹுசைன், ருஷ்தி ஹபீப், வஸீமுல் அக்ரம், ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
வழக்குத் தொடுநர் சட்டமா அதிபருக்காக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி சஜித் பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இதன்போது மன்றில் அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வாவும், 11 ஆவது பிரதிவாதியின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீபும் விடயங்களை முன் வைத்தனர்.
11 ஆவது பிரதிவாதி தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டுக்கு உயர் நீதிமன்றம் இலக்கம் ஒன்றினை அளித்துள்ளதாக குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, எஸ்.சி.டி.ஏ.பி. 01/2025 என்பதே அவ்விலக்கம் என குறிப்பிட்டார்.
அவ்வழக்கின் கோவை பிரதம நீதியரசரின் பொறுப்பில் இருப்பதாகவும், அம்மேன்முறையீட்டை விசாரிக்க இன்னும் ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது சட்டமா அதிபரும், 11 ஆவது பிரதிவாதியின் சட்டத்தணியும் இணைந்து, இணைந்த நகர்த்தல் பத்திரம் ஒன்றினை உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பித்து மேன் முறையீட்டு மனுவை விசாரணைக்கு அழைத்து, மேல் நீதிமன்ற வழக்கை முன் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக மன்றுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்தே விடயங்களை ஆராய்ந்த மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், வழக்கை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க தீர்மானித்தனர்.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்
01. அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி
02. அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
03. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
04. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
05. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
06. அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
07. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
08. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
09. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15. அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16. அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப் (சிறையில் மரணமடைந்து விட்டார்)
18. ராசிக் ராசா ஹுசைன்
19. கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20. செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24. மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்
-Vidivelli
No comments:
Post a Comment