2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) எழுத்தாணை (ரிட்) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அத்துடன், 2024 மார்ச் 05ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வயில் கே.டபிள்யூ. கண்டம்பியை குறித்த பதவியில் நியமிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த நியமனத்தை சவாலுக்குட்படுத்தி, கண்டம்பி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்த்ககது.
வழக்கு விசாரணையின்போது மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் ஒரு சிவில் பொறியியலாளர் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் சுமார் 23 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊழியர் என்றும் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கூறினார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதில் பங்கேற்ற மனுதாரர் 61 புள்ளிகளைப் பெற்றதாகவும் பைசர் முஸ்தபா இங்கு சுட்டிக் காட்டினார்.
ஆனால் தனது கட்சிக்காரரை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற SMP, சூரியபண்டாரவை அந்தப் பதவிக்கு நியமிக்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபை 2024 மார்ச் 05ஆம் திகதி முடிவு செய்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
எனவே தனது கட்சிக்காரரை விடக் குறைந்த புள்ளியைப் பெற்ற ஒருவரை அந்தப் பதவியில் நியமிப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும், அந்த முடிவை செல்லுபடியற்றதாக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னர் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர், இந்த நியமனத்தை மேற்கொள்வதில் பிரதிவாதிகள் நியமன நடைமுறையை மீறியுள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, இந்த செயன்முறை முற்றிலும் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதன் பின்னர் குறித்த உத்தரவைப் பிறப்பித்தது.
No comments:
Post a Comment