விபத்தில் காயமடைந்ததால் நீதிமன்றில் ஆஜராகாத பஷில் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

விபத்தில் காயமடைந்ததால் நீதிமன்றில் ஆஜராகாத பஷில்

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகாமலிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷவை எதிர்வரும் நவம்பர் (21) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விபத்துக்குள்ளாகி கழுத்து மற்றும் நரம்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டதாக நீதி மன்றுக்கு அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மாத்தறை நீதவான் அருண புத்ததாச கடந்த (23) வௌ்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

மாத்தறை பகுதியில் 50 மில்லியன் ரூபாவுக்கு வாங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு தொடர்பாகவே முன்னாள் அமைச்சர் பஷில் ராஜக்‌ஷ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிலத்தை வாங்கியமை தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் முன்னதாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான போதிலும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியின் சகோதரி அயோமா கலப்பத்தி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் வழக்கின் மனுதாரர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பின்வரும் உண்மைகளை நீதிமன்றுக்கு வழங்கியிருந்தார்.

”இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான பசில் ராஜபக்சவுக்கு செப்டம்பர் 18, 2024 அன்று மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

எனவே, அவரது பிணையை இரத்துச் செய்து, நியாயமான காரணத்தை தெரிவிக்காமல் நீதிமன்றத்தை தவிர்ப்பதற்காக பிடியாணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து பிரதிவாதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி தனது வாதங்களை முன்வைக்கையில், தமது கட்சிக்காரர், மே 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நாடு திரும்புவதற்காக விமானப் பயணசீட்டுக்களை முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், அவர் அமெரிக்காவில் ஒரு நாற்காலியில் இருந்து விழுந்து கழுத்து மற்றும் நரம்பு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் அவர் 6 மாதங்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளனர்.” எனக் கூறினார்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால் அன்றையதினம் அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment