1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்ட ஆண்டாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதும் வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதும் இந்த ஆண்டில்தான்.
புலிகளின் ஆயுதப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடிக்கப்படும் வரையும் விடுதலைப் புலிகள் இயக்கம் முஸ்லிம் புத்திஜீவிகளை, அரசியல்வாதிகளை, படுகொலை செய்தல், கப்பம் அறவிடல், கடத்தல் உட்பட முஸ்லிம் சமூகத்தின் வியாபாரம், விவசாயம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என்று தொடங்கி முஸ்லிம் இனச் சுத்திகரிப்புக்கு வழிசமைக்கும் கூட்டுப் படுகொலைகளையும் அரங்கேற்றியது.
அதேபோன்று முஸ்லிம்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து சொந்த மண்னை விட்டும் பலவந்தமாக வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கைகள் 1990 இல் உச்ச கட்டத்தை அடைந்தன.
இவ்வாறு வடக்கு கிழக்கு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் உச்சகட்டமாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி காத்தான்குடியில் அமைந்துள்ள மீராஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுசைனியா பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது புலிகள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலினால் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
புனிதமான இரண்டு பள்ளிவாசல்களில் தொழுகையில் நின்ற 6 வயது சிறுவன் முதல் 84 வயது முதியவர் வரை வயது வித்தியாசமின்றி 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து இலங்கை விமானப்படையினரின் விமானத்தின் மூலம் அம்பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 21 பேர் பின்னர் உயிர் இழந்தனர்.
பலர் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் தற்போதும் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் பலர் ஊனமுற்று வாழ்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் பின்னாலும் ஒரு சோக வரலாறு இருக்கின்றது.
இத்தாக்குதல் சம்பவத்தினால் இலங்கை முஸ்லிம்கள் கவலையில் ஆழ்ந்திருந்தபோது சரியாக ஒரு வாரம் கழிந்த நிலையில் ஆகஸ்ட் 11 இல் இரவு உறக்கத்தில் இருந்த ஏறாவூர் முஸ்லிம்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 121 பேர் ஷஹீதாக்கப்பட்டனர்.
இதேபோன்று காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம் பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ் கடமையினை முடித்துக்கொண்டு தமது சொந்த ஊரான காத்தான்குடி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட காத்தான்குடி ஹாஜிமார்களும் அவர்களோடு வந்த உறவினர்களும் இன்னும் சில பொதுமக்களும் விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள் மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இதே காலப்பகுதியில் ஆகஸ்ட் 01 இல் அக்கரைப்பற்று நகரில் 8 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 05 இல் அம்பாறை முள்ளியங்காட்டில் 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 06 இல் அம்பாறையில் 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதே தினத்தில் சம்மாந்துறையில் 04 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு பட்டியல் நீண்டு செல்கின்றது.
இவ்வாறு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு பேரவலம் ஏற்பட்ட 1990 ஆம் ஆண்டின் கொடிய நினைவுகளின் மையமாக ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இத்தினத்தை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் பள்ளிவாசல் படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி மீரா பள்ளிவாசலிலும் ஹுசைனியா பள்ளிவாசலிலும் கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சுஹதாக்கள் தினத்தின்போது காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை மற்றும் ஏறாவூர் அழிஞ்சிப் பொத்தானை இனச் சுத்திகரிப்பு அக்கரைப்பற்று வயல் படுகொலை உட்பட இவ்வாறு முஸ்லிம்கள் மீதான படுகொலைகளின்போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக இத்தினத்தை தேசிய சுஹதாக்கள் தினமாக சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் பிரகடனப்படுத்தியது.
இவ்வளவு இழப்புக்களையும் இழந்து நிற்கின்ற முஸ்லிம் சமூகத்தின் தனித்துவம் அங்கீகரிக்கப்படல் வேண்டும். முஸ்லிம்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். வடக்கு கிழக்கு இனப் பிரச்சினைக்கு முன்வைக்கப்படுகின்ற தீர்வுத் திட்டங்கள் முஸ்லிம் சமூகத்தை பாதிப்பதாய் அமைந்துவிடக் கூடாது.
சகோதர தமிழ் மக்களின் தியாகமிக்க இழப்புகளுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்கின்ற அதேநேரம் அத்தீர்வுகளும் தீர்மானங்களும் முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி விடக்கூடாது என்பதே முஸ்லிம்களின் கோரிக்கையாகும்.
குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் உடல் எச்சங்களை எடுத்து இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையினை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இதுவரை இந்த சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்காத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இனப் பிரச்சினையின் பேரால் அநியாயமாக இழந்தவைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இழந்த உயிர்கள் மீளத் திரும்பாதபோதிலும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் நீதியும் நியாயமும் நிலை நாட்டப்படல் வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் இருப்பிற்காக தமது உயிர்களை நீத்த சுஹதாக்களின் சுவன வாழ்வுக்காகவும் அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளின் நல்வாழ்வுக்காகவும் இந்த நாட்களில் பிரார்த்திப்போம்.
Vidivelli
No comments:
Post a Comment