அரச நிறுவனங்கள் பலவற்றில் இலஞ்சமும், ஊழழும் வியாபித்துள்ளது : மோட்டார் போக்குவரத்து தலைமையகத்தில் 41 இலட்சம் ரூபா மீட்பு - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 25, 2025

அரச நிறுவனங்கள் பலவற்றில் இலஞ்சமும், ஊழழும் வியாபித்துள்ளது : மோட்டார் போக்குவரத்து தலைமையகத்தில் 41 இலட்சம் ரூபா மீட்பு - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் பல அரச திணைக்களங்களில் இலஞ்சமும், ஊழழும் வியாபித்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இந்த விடயத்தில் நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்கிறோம். இலஞ்சம் கொடுப்பதும் அதனைப் பெற்றுக் கொள்வதும் பாரதூரமான தவறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும், மேல் நீதிமன்ற நீதிபதியுமான ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமையகத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (24) திடீர் சோதனையை நடத்தியது. இதன்போது 40 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சுற்றிவளைப்பு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எமக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு பிடியாணை உத்தரவுடன் நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 41 இலட்சத்து 17 ஆயிரத்து 340 ரூபா பணம் மீட்கப்பட்டது.

கார் பரிமாற்றப் பிரிவின் பிரதி ஆணையாளரின் அலுவலகத்திற்குள்ளிருந்து 4.1 மில்லியன் ரூபாவை அதிகாரிகள் கண்டெடுத்தனர். இப்பெருந்தொகை பணம் குறித்து அலுவலக அதிகாரிகள் நியாயமான அல்லது போதுமான தகவல்களை வழங்குவதற்கு முடியாதளவு தடுமாறியமையால் அவை இலஞ்சத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கருதப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பெரும்பாலன அதிகாரிகள் இலஞ்சம் கோருகின்ற நிலையில் குறித்த நிதி அவர்களிடத்தில் பகிரப்படுகிறது.

இதற்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அந்த திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் உள்ளிட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த திணைக்களத்தில் மாத்திரமல்லாமல் பல அரச திணைக்களங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான அரச அதிகாரிகளிடம் ஒன்றைக்கூற வேண்டும். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உங்கள் விடயத்தில் அவதானமாக உள்ளது. இலஞ்சம் கொடுத்தல் மற்றும் இலஞ்சத்தை பெறுதல் பாரதூரமான தவறு என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவதானத்துடன் உள்ளது என்றார்.

No comments:

Post a Comment