(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களிடம் பணம் உட்பட ஏனைய சிறப்புரிமைகள், விசேட சலுகைகளை முன்வைத்து அரசாங்கத்தால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை அரசாங்கம் இன்னும் உணரவில்லை. மேலும் சில மாதங்கள் சென்ற பின்னர் அரசாங்கத்துக்கு இந்த நிலைமை மேலும் மோசமடையும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசாங்கம் இனியாவது மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கத்தால் தாம் பாரியளவில் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதை இன்று பெரும்பாலானவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமையிலும் கூட 43 சதவீதமான மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றனர். இதனை வெற்றி என அரசாங்கம் கூறிக் கொண்டாலும், அந்த வெற்றியின் பலம் குறைவடைந்துள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
5 ஆண்டுகள் ஆட்சி புரிய வேண்டுமெனில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமெனில், மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனில் அரசாங்கம் இதனை விட அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நினைத்தளவு வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களும் செல்ல இடமின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் ஒரு செய்தியை வழங்கியிருக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். அரசாங்கம் பலவீனமடையும் வரை பார்த்துக் கொண்டிருக்காமல் நாட்டுக்கான மாற்றுத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
5 ஆண்டுகள் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். 5 ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தால் அடுத்து ஆட்சியைக் கைப்பற்றக் கூடியவாறான புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு காணப்படுகிறது.
இந்நிலையில் அரசாங்கம் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும்கூட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். பணம் உட்பட ஏனைய சிறப்புரிமைகள், விசேட சலுகைகளை முன்வைத்து அரசாங்கத்தால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment