பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, அவர் சார்பாக முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பு ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளது.
பதவி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பாராளுமன்ற கட்டிடத்தில் விசாரணைக்குழு முன்னிலையில் நேற்று (19) ஆஜராகியிருந்தார்.
இதன்போதே மேற்படி குழு அவர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பு ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேனவின் தலைமையில், டப்ளியூ.எம்.என்.பி இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யு.எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோரின் முன்னிலையில் மேற்படி விசாரணைக் குழு பாராளுமன்ற கட்டிடத்தில் கூடியது.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முதல் தடவையாக நேற்று (19) விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தார்.
இங்கு தேசபந்து தென்னகோனிடம் 23 குற்றங்கள் உள்ளடங்கிய குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஆர்.எஸ்.வீர விக்கிரமவினால் அடிப்படை ஆட்சேபனை மற்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைக்குழுவிற்கு வருகை தந்திருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரஜித பெரேரா ஆகியோர் ஆட்சேபனையைப் பதிவு செய்தனர்.
அனைத்து விடயங்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான விசாரணைக்குழு பிரதிவாதியான பொலிஸ்மா அதிபரின் சார்பதக முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனை அனைத்தையும் நிராகரித்தது. அத்துடன், விசாரணை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்தகட்ட விசாரணைக்காக மேற்படி விசாரணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment