விலக திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தி வதந்தி : மறுத்துள்ள கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை - News View

About Us

About Us

Breaking

Monday, May 19, 2025

விலக திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தி வதந்தி : மறுத்துள்ள கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை

இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய கிண்ணம் மற்றும் வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண போட்டிகளில் இருந்து இந்தியா விலக திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மறுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு பேசிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் தேவஜித் சைகியா, ‘இன்று (நேற்று) காலை தொடக்கம் ஆசிய கிரிக்கெட் கௌன்சில் நடத்தும் போட்டிகளான ஆசிய கிண்ணம் மற்றும் வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடர்களில் பங்கேற்காமல் இருக்க இந்திய சபை தீர்மானித்திருப்பது பற்றி சில செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது எந்த முடிவும் எடுக்கவோ இல்லை என்பதோடு இவ்வாறான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை’ என்றார்.

வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண போட்டி அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருப்பதோடு ஆடவர் ஆசிய கிண்ணப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.

எனினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தற்போதைய பதற்ற சூழலுக்கு மத்தியில் ஆசிய கிரிக்கெட் கௌன்சிலினால் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலகுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

ஆசிய கிரிக்கெட் கௌன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment