நானுஓயா வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பௌசர் : கசிந்த எரிபொருளை சேகரித்து சென்ற மக்கள் : நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

நானுஓயா வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பௌசர் : கசிந்த எரிபொருளை சேகரித்து சென்ற மக்கள் : நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் கொள்கலன் ஒன்று புதன்கிழமை (14) மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாரிய போக்குவரத்து நெரிசலும் எரிபொருள் கசிவும் ஏற்பட்டது.

இந்த கொள்கலன் கொலன்னாவிலிருந்து ஹட்டன் வழியாக வெளிமடை நோக்கி பயணிக்கும்போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பௌசரில் 33,000 லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருந்ததாகவும் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் கசிந்து வெளியேறி வீணாகியுள்ளதுடன் எரிபொருள் குறித்த பகுதியில் பரவியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொள்கலன் கவிழ்ந்ததையடுத்து கசிந்த எரிபொருளை பெருந்திரளான பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் உடனடியாக சிலோன் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, மேலும் கசிவைத் தடுக்க எஞ்சிய எரிபொருளை மற்றைய கொள்கலன்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் 20 ஆயிரம் எரிபொருள் மாத்திரம் எஞ்சியதாகவும் ஏனையவை கசிவின்போது பொதுமக்கள் சேகரித்துக்கொண்டதாகவும் சிலோன் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள நீரோடையில் எரிபொருள் கலந்ததால் அந்த நீரை பயன்படுத்தும் பிரதேச மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அந்த நீர் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சங்கமிக்கின்றமை கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகிறது.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment