மனசாட்சி, வெளிப்படைத் தன்மை, விவேகத்துடனான செயற்பாடுகளே JVP யின் வெற்றிக்கு காரணம் : மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

மனசாட்சி, வெளிப்படைத் தன்மை, விவேகத்துடனான செயற்பாடுகளே JVP யின் வெற்றிக்கு காரணம் : மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டையும், நாட்டு மக்களையும் முன்நிலைப்படுத்தி செயற்படும் மனசாட்சியே தமது வரலாற்றின் தொடர்ச்சி எனவும் அதனை மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் பாதுகாக்கும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மனசாட்சி, வெளிப்படைத் தன்மை, விவேகம் இவை மூன்றையும் தாரக மந்திரமாகக் கொண்டு அன்றும், இன்றும் செயற்படுகின்றோம் என தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் மனசாட்சியுடன் செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கொழும்பு விக்டோரியா பூங்கா திறந்த வெளி அரங்கில் நேற்று (14) நடைபெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது  ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், பல அத்தியாயங்களை படிப்படியாக நாம் புரட்டி வந்துள்ளோம். வேதனைகள், இடறல்கள், பலவீனங்கள், அர்ப்பணிப்புகள், சகிப்புத்தன்மைகள் என இந்த அத்தியாயங்களில் நாம் சில சந்தர்ப்பங்களை அதிகமாகவும் சில சந்தர்ப்பங்களை குறைவாகவும் சந்தித்துள்ளோம்.

1965 ஆம் ஆண்டு முதல் எமது அறுபதாவது வருட நிறைவு வரை தொடர்ச்சியாக வந்த சில முக்கிய விடயங்களைக் கூற முடியும். இந்த 60 வருடங்களிலும் பல வெற்றிகளை, பல தோல்விகளை பல காட்டிக் கொடுப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தபோதும், பொது விடயமாக ஒன்று மனசாட்சி, இரண்டு வெளிப்படைத் தன்மை, மூன்று விவேகமான அறிவு என எம்மிடம் காணப்பட்டது. இவையே எதிர்காலத்திலும் எம்மை வழி நடத்தும். 

பெற்றுக் கொள்ளுதல் என்பது சொத்துக்கள் மட்டுமல்ல. ஜனரஞ்சகம், தனித்துவமாகக் காட்டுதல் என்பதையும் கூற முடியும். இவை எதுவும் இல்லாமல் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி செயற்படும் மனசாட்சியே எமது வரலாற்றின் தொடர்ச்சியாகும்.

இன்றும் எமக்கு வெற்றியைக் கொண்டு வருவதும் எதிர்காலத்திற்காக வழிகாட்டுவதும் எதிரில் உள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதியும் எம்மிடம் காணப்படும் மனசாட்சியின் அடிப்படையே.

கடந்த காலங்களில் பெரிதாக தம்மைக்காட்டி கொண்டவர்கள் மத்தியில், சிறியவர்களான நாம் மனசாட்சியில் அவர்களை விட பல மடங்கைக் கொண்டுள்ளோம்.

நாளையும் எதிர்காலத்திலும் நாம் மனசாட்சியுடன் செயற்படுவோம். எத்தகைய கஷ்டங்களும் எமது மனசாட்சியை இல்லாமலாக்க முடியும்.

கஷ்டங்கள் மட்டுமல்ல, பதவிகள், பதவிகள் மூலம் கிடைக்கக்கூடிய பிரகாசிப்பு அதற்கு மக்கள் வழங்கும் பிரதிபலிப்பு, சம்பிரதாய நிறுவன வியூகம் பதவிகள் மூலம் கிடைக்கும் நிலைகள் இவை அனைத்தும் மனசாட்சியை வீழ்த்த முடியும். எனினும் நாம் மிக உறுதியாக உள்ளோம்.

கடந்த காலமா, நிகழ்காலமா அல்லது எதிர்காலமா எப்போதும் மனசாட்சியுடன் நாம் செயப்படுவோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் காட்டிக் கொடுக்காத மனசாட்சியுடன் நாம் செயற்படுவோம். இதுவே எமது அறுபது ஆண்டு கால தொடர்ச்சியாகும். அதனை நாம் பாதுகாப்போம். அதற்கு நாம் பொறுப்புக் கூறுவோம் அதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

60 வருட காலம் இலங்கையில் எந்த அரசியல் கட்சியும் முகம் கொடுக்காத கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளோம். எனினும், வெளிப்படைத் தன்மையை நாம் பாதுகாத்துள்ளோம். எமக்கு எதிராக புறப்பட்ட அனைத்தையும் முற்றாக ஒழித்து நாம் முன்னேறியமை இந்த வெளிப்படைத் தன்மையால் ஆகும். 

தவறு செய்தால் தவறு என ஏற்றுக் கொள்ளுவது வெளிப்படைத் தன்மையாகும். தவறு செய்துவிட்டு தப்பியோடுதல், ஒளிந்து கொள்ளுதல் எம்மிடம் கிடையாது. எத்தகைய இறுக்கமான நிபந்தனைகளின் போதும் கூட வெற்றிக்காக உழைக்க நாம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவோம். 

ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் தேர்தலில் நாம் எத்தகைய நிலையை எதிர்கொண்டோம்? பிறரின் இகழ்ச்சியை, ஏளனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எம்முடன் இருந்தவர்களே எம்மை விட்டு விட்டுச் சென்றனர். நிந்தைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. எனினும், நாம் வெற்றியை நோக்கிய நம்பிக்கையுடன் செயற்பட்டோம். அதுவே எமது வெளிப்படைத் தன்மை.

எமது கட்சியை கைவிட்டுச் செல்லும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தன. எமது செயற்பாடுகளை நிறுத்த வேண்டிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்தன. இந்த நாட்டில் அவ்வாறு ஒரு அமைப்பு இருக்குமானால் அது மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. 

மக்கள் எம்மை உரசிப் பார்க்கின்றார்கள். அந்த வகையில் வெளிப்படையான அமைப்பாக எமது அமைப்பு திகழ வேண்டும். நாட்டு மக்கள் எம்மைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக வழிவிடும் அமைப்பாக நாம் இருக்க வேண்டும். எமது அமைப்பு மக்கள் மத்தியில் தற்போது எந்த நிலையில் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரு புறம் வைத்துவிட்டு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் பார்ப்போம். பெரும் தலைவர்களை உருவாக்கிய மெதமுல்லவிலும் அவர்களுக்குத் தோல்வியேற்பட்டது.

கொழும்பு மாநகர சபை முதல்வராவதற்கு போட்டியிட்டவரின், பொரளை தெற்கு தொகுதியும் எமது சகோதரி ஒருவரிடம் தோற்றது. மக்கள் மத்தியில் மிக பலமான அமைப்பாக இந்த அமைப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

தெற்கு முழுவதையும் பார்த்தால் ஒரு பிரதேச சபையில் கூட நாம் தோற்கவில்லை. மேல் மாகாணத்தை நோக்கும்போது களுத்துறையில் மூன்றைத் தவிர மேல் மாகாணத்தில் அனைத்து பிரதேச சபைகளையும் நாம் வெற்றி கொண்டுள்ளோம். சப்ரகமுவ மாகாணத்தை நாம் வெற்றி கொண்டுள்ளோம். கற்பிட்டியைத் தவிர வடமேல் மாகாணத்தையும் வட மத்திய மாகாணத்தையும் நாம் வெற்றி கொண்டுள்ளோம். 

நுவரெலியா மாவட்டத்தில், பன்னிரெண்டில் பத்தை வெற்றி கொண்டுள்ளோம். வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என வன்னி மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்கை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். 

கிழக்கில் அம்பாறை, திருகோணமலையில் பெரும்பான்மையான வாக்கு எமக்கே கிடைத்தது. யாழ்ப்பாண நகர சபையில் எமக்கு பத்து ஆசனங்கள். நாம் எங்கும் தோல்வியடையவில்லை. அந்த வகையில் மக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரே அமைப்பு மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே. வேறு எதுவும் கிடையாது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment