(எம்.மனோசித்ரா)
நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது காலத்தின் தேவையாகும். அதில் ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இந்த சட்டத்தில் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும். தற்போதிருப்பது முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் அல்ல. சுமார் 38 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அவற்றை உள்ளடக்கிய சட்டமூலமே தற்போது காணப்படுகிறது.
அவற்றிலும் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்காக போதுமானளவு கால அவகாசமும் அரசாங்கத்தால் வழங்கப்படும். திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளின்போது ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நிகழ்நிலை பாவனையாளர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, திருத்தப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் தேவை என்பதற்கு அப்பால், பொதுமக்களின் தேவை என்பதே முக்கியத்துவமானது.
சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்படுவோர், தனிப்பட்ட நபர்கள் மீது அவதூறு பரப்புதல் என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வாக நிகழ்நிலை காப்புச்சட்டம் அமையும் என்றார்.
அமைச்சரவையால் கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச்சட்டத்தை திருத்தம் செய்வதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த அமைச்சரவை குறிப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போது இனங்காணப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் இனங்காணப்படும் திருத்தங்களை உள்ளடக்கி மேற்குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் தொடர்புடைய அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment