இலங்கையின் பிரபல சிங்கள நடிகை காலமானார் : சிவாஜியுடன் பைலட் பிரேம்நாத்தில் நடித்தவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 24, 2025

இலங்கையின் பிரபல சிங்கள நடிகை காலமானார் : சிவாஜியுடன் பைலட் பிரேம்நாத்தில் நடித்தவர்

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார்.

சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும்.

1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்த அவரது இயற் பெயர் வன்னி ஆராச்சிகே மாலினி செனஹெலதா பொன்சேகா எனும் பெயரில் பிறந்த இவர், பின்னர் இலங்கை சினிமாவில் மாலினி பொன்சேகா எனும் பெயரில் பிரபலமானார்.

1963 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் அறிமுகமான திருமதி மாலினி பொன்சேகா, 1968 ஆம் ஆண்டு புஞ்சி பபா எனும் சிங்கள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

1963 ஆம் ஆண்டு “நோரத ரத” நாடகத்துடன் மேடையில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 1968 ஆம் ஆண்டு, “அகல் வெஸ்ஸ” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த மேடை நாடக நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

அவர் 14 மேடை நாடகங்களில் நடித்து, இலங்கையின் முதல் பெண் தொலைக்காட்சி நாடக இயக்குநரானார், நிருபமாலாவை இயக்கி நடித்தார். சினிமாவில் அவரது இயக்குநரான முயற்சிகளில் சசர சேத்தனா (1984), அஹிம்சா (1987), ஸ்த்ரீ (1991) ஆகியன அடங்கும்.

1969 ஆம் ஆண்டு தேசிய அரச நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற பின்னர் அவர் முக்கியத்துவம் பெற்றார்.

1973 ஆம் ஆண்டு மிகவும் பிரபலமான நடிகைக்கான விருதை வென்ற இவர், ஜனாதிபதி விருது, சரசவி விருது, OCIC விருது, சிறந்த நடிகைக்கான சுமதி விருது உள்ளிட்ட ஏராளமான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

நிதானய, பம்பரு எவித், வேகந்தே வளவ்வ, ஹிங்கனா கொல்லா, ஆராதனா, யச இசுரு, அம்மாவருனே போன்ற திரைப்படங்கள் திருமதி மாலினி பொன்சேகாவின் நடிப்புத் திறனை வெளிப்படுத்திய சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

அவர் 140 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பைலட் பிரேம்நாத் (1978) எனும் தமிழ் படமானது அவரது சர்வதேச திரைப்பட நுழைவாகும். அதில் அவர் இந்திய தமிழ் சினிமா ஜாம்பவான் சிவாஜி கணேசனுடன் நடித்திருந்தார்.

சர்வதேச அளவில், 1975 ஆம் ஆண்டு மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் விசேட ஜூரி விருதையும், 1977 ஆம் ஆண்டு புது தில்லி திரைப்பட விழாவில் விருதையும் பொன்சேகா பெற்றார். அத்தகைய உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இலங்கை நடிகை என்ற பெருமையை அவர் பெற்றார். 

2010 ஆம் ஆண்டில், CNN இனால் ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.

அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு சிறப்பம்சமாக, 2024 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் பாடகி சாபா ஜெயருக்கின் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இசை காணொளியான “எயா வசந்தய நொவே” இல் தோன்றினார். அவரது உணர்ச்சிபூர்வமான நடிப்பு பரவலான பாராட்டைப் பெற்றது மற்றும் புதிய தலைமுறை பார்வையாளர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தியது.

மாலினி பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் அளித்த ஆதரவை அங்கீகரிக்கும் விதமாக தேசியப்பட்டியலில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் நுழைந்த திருமதி மாலினி பொன்சேகா, 2015 வரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

1996 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியிடமிருந்து விஷ்வ பிரசாதினி விருது, பல ஜனாதிபதி விருதுகள், OCIC விருதுகள் மற்றும் ஸ்லிம் நீல்சன் மக்கள் விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

2003 ஆம் ஆண்டு BMICH இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்ட மாலினியே என்ற பிரமாண்டமான பாராட்டு விழா மூலம் அவர் கௌரவிக்கப்பட்டார். 

2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அவரது நினைவாக ஒரு விசேட நிகழ்வை நடத்தியிருந்தது. 2019 ஆம் ஆண்டில், அவர் ஜனாபிமானி கௌரவ விருதைப் பெற்றார்.

இலங்கை கலைகளுக்கு மாலினி பொன்சேகாவின் ஒப்பற்ற பங்களிப்பு, நாட்டின் கலாசார துறையில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது அசாதாரண திறமைக்காக மட்டுமல்லாமல், தலைமுறை தலைமுறையாக கலைஞர்கள் மற்றும் இரசிகர்கள் மீது அவர் செலுத்திய நீடித்த செல்வாக்கிற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார்.

No comments:

Post a Comment